/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
செங்கல் சூளை தொழிலாளி மகன் ஐ.ஐ.டி.,யில் படிக்க தயாராகிறார்
/
செங்கல் சூளை தொழிலாளி மகன் ஐ.ஐ.டி.,யில் படிக்க தயாராகிறார்
செங்கல் சூளை தொழிலாளி மகன் ஐ.ஐ.டி.,யில் படிக்க தயாராகிறார்
செங்கல் சூளை தொழிலாளி மகன் ஐ.ஐ.டி.,யில் படிக்க தயாராகிறார்
ADDED : நவ 01, 2025 11:17 PM

தடை... அதை உடை... புது சரித்திரம் படை என்ற வார்த்தை, பல தடைகளை தாண்டி வெற்றி பெறுவதற்கு ஊக்கம் அளிக்கும் வார்த்தையாக உள்ளது. இந்த வார்த்தைக்கு ஏற்ப, பலர் தங்கள் வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்து சாதித்து உள்ளனர்.
இவர்களில், சித்ரதுர்காவின் மொலகால்மூரு தாலுகா மார்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிசந்திரா, தார்வாட் ஐ.ஐ.டி.,யில் இயந்திர பொறியியல் படிக்க தேர்வாகி உள்ளார். இதற்காக அவர் கடந்து வந்த தடைகள் ஏராளம்.
இதுகுறித்து ரவிசந்திரா கூறியதாவது:
எனது பெற்றோர் மல்லேஸ் - பாக்கியம்மா. எங்கள் சொந்த ஊர் விஜயநகராவின் கூட்லிகி என்றாலும், கடந்த 15 ஆண்டுகளாக மொலகால்மூரு மார்லஹள்ளியில் வசிக்கிறோம். எனது பெற்றோர், செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.
துவக்க, மேல்நிலை கல்வியை பல்லாரி குருகோட்டில் உள்ள அரசு பள்ளியிலும், பி.யு.,வை ஹொஸ்பேட்டிலும் படித்தேன். பெற்றோர் செங்கல் சூளையில் மணிக்கணக்கில் வேலை செய்து என்னை படிக்க வைத்தனர். நானும் பள்ளி விடுமுறை நாட்களில் செங்கல் சூளைக்கு சென்று வேலை செய்து இருக்கிறேன். குடும்பத்தில் கடுமையான வறுமை இருந்த போதிலும், கல்வி தான் நம்மை பாதுகாக்கும் என்று தந்தை அடிக்கடி கூறுவார்; கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தனர்.
இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. ஆன்லைன் வகுப்புகள், கல்லுாரி விரிவுரையாளர்கள், மூத்த மாணவர்கள் வழிகாட்டுதல் மூலம் படித்து ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்றேன். இந்த தேர்வில் நாட்டில் 1,201 வது இடத்தை பிடித்து உள்ளேன். பட்டியல் ஜாதி இடஒதுக்கீட்டின் கீழ் தார்வாட் ஐ.ஐ.டி.,யில் இயந்திர பொறியியல் படிக்க இடம் கிடைத்து உள்ளது. தற்போது தாய், தந்தை இருவருக்கும் தினசரி சம்பளமே 230 ரூபாய் தான். கஷ்டத்தில் கூட படிப்பில் என்னை கரை சேர்த்த, பெற்றோருக்கு, நான் நன்றாக படித்து ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

