/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் தம்பதி
/
ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் தம்பதி
ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் தம்பதி
ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் தம்பதி
ADDED : அக் 18, 2025 11:05 PM

மழை, வெயில், குளிர் என்று பாராமல் எல்லையில் நின்று நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் தியாகத்திற்கு நாம் எப்போதும் தலைவணங்க வேண்டும். மற்ற குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்க, தன் குடும்பத்தை பிரிந்து அவர்கள் செய்யும் சேவைக்கு ஈடே கிடையாது.
நம் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த, ராணுவ வீரர்கள் ஏராளம். பயங்கரவாதிகள் உடனான சண்டையில் வீரமரணம் அடையும், ராணுவ வீரர்கள் பற்றி சிறிது காலம் மட்டுமே கவலைப்படும் மக்கள், பின், தங்கள் அன்றாட வேலையில் மூழ்கிவிடுகின்றனர். ஆனால் கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்த பிரசாந்த் பட் - சிந்து தம்பதி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினரை தேடிச் சென்று ஆறுதல் கூறுகின்றனர்.
தியாகம் இதுகுறித்து ஆயுர்வேத டாக்டரான சிந்து கூறியதாவது:
நாட்டிற்காக உயிரை கொடுக்கும் ராணுவ வீரர்களின் தியாகங்களை, நாம் எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது. ஆனால் அவர்களை இழந்த குடும்பத்தினருக்கு, நம்மால் ஆறுதலாக இருக்க முடியும். 'அக்குடும்பத்தினரை தேடிச் சென்று, எதற்கு கவலைப்பட வேண்டாம்; உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று கூறும் ஆறுதல், அவர்களுக்கு உத்வேகமாக இருப்பதுடன், நம்பிக்கை அளிக்கும்.'
சில ஆண்டுகளில் நாடு முழுதும் 30க்கும் மேற்பட்ட வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினரை சந்தித்து நானும், என் கணவரும் ஆறுதல் கூறி உள்ளோம். வீரர்கள் குடும்பத்தினர் நுாற்றுக்கும் மேற்பட்டோருடன் தொடர்பில் உள்ளோம். சமூக வலை தளங்களில் KnowYourHeroes என்ற பெயரில், வீரர்கள் தியாகம், அவர்களின் வாழ்க்கை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.
ராக்கி கயிறு உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூற செல்லும் பயணத்தின் ஒரு பகுதியாக, வீரர்களின் கதைகளை உள்ளடக்கிய 'வீர்கதே' என்ற புத்தகத்தை உருவாக்கி உள்ளோம். ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் சுதிர்குமார் வாலியா, 1999ல் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்தார்.
அவரது வீட்டிற்கு சமீபத்தில் சென்றபோது, குடும்பத்தினர் ஒரு பெட்டியை திறந்து காண்பித்தனர். அந்த பெட்டியில் சுதிர்குமார் வாலியா, ஒவ்வொரு ஆண்டும் தன் சகோதரிக்கு அனுப்பிய ராக்கி கயிறு இருந்தது. இது எங்கள் மனதை உருக்கியது.
ராணுவத்தினர் தியாகம் பற்றி சிறுவயதில் இருந்தே, என் பெற்றோர் என்னிடம் சொல்லி வளர்த்தனர். இது என் மனதில் ஆழமாக வேரூன்றியது. ஒவ்வொரு வீரரின் வீடுகளுக்கும் செல்லும்போது, மனதை தொடும் பல நிகழ்வுகளை கண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

