/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
துளு மொழி கற்க செயலியை உருவாக்கிய எலக்ட்ரீஷியன்
/
துளு மொழி கற்க செயலியை உருவாக்கிய எலக்ட்ரீஷியன்
ADDED : டிச 28, 2025 05:00 AM

தட்சிண கன்னடா மாவட்டம், மூடபித்ரியை சேர்ந்தவர் சச்சின், 26. எலக்ட்ரீஷியனான இவர், 10ம் வகுப்பு மட்டுமே படித்தார். இவரது தாய் மொழி துளு. தன் தாய் மொழியான துளு மீது பற்று அதிகம். அதனை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க விரும்பினார்.
இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்போது, துளு மொழியை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க, நாமே ஏன் புதிய செயலியை உருவாக்கக்கூடாது என்று நினைத்தார். 'நினைத்ததை முடிப்பவன் நான்' என்பது போல செய்தும் காட்டினார். செயலியை எப்படி உருவாக்குவது என்பதை, யூ டியூப் பார்த்து கற்றுக்கொண்டார். மேலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, செயலியை வெற்றிகரமாக உருவாக்கினார்.
இந்த செயலிக்கு, 'துளுவெர்ஸ்' என்று பெயரிட்டார். இதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவேற்றவும் முயன்றார். அப்போது, இந்த செயலியை மற்றவர்கள் உபயோகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று நிராகரிக்கப்பட்டது. இதே போல, அடுத்த முறையும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், செயலியில் சில மாற்றங்களை செய்தார்.
மகிழ்ச்சி
அனைத்து தரப்பினரும் எளிதில் உபயோகிக்கக்கூடிய வகையில், செயலியை மாற்றி வடிவமைத்தார். கடந்த நவம்பரில் செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் அனுமதிக்கப்பட்டது. தற்போது வரை, 5,000க்கும் மேற்பட்டோர் செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளனர். இதை பார்த்து, சச்சின் அகம் மகிழ்ந்தார்.
இதுகுறித்து சச்சின் கூறியதாவது:
துளு மொழியை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில், செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனக்கு தொழில்நுட்ப அறிவு இல்லை. இருப்பினும், யூ டியூப், ஏ.ஐ., ஆகியவற்றின் உதவியோடு செயலியை உருவாக்கி விட்டேன். இதைப்பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். செயலியும் பயனுள்ளதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ பெரிதாக சாதித்த மாதிரி தோணுது. 'துளுவெர்ஸ்' செயலி இலவசமாக கிடைக்கிறது. இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள். இந்த செயலியை உருவாக்க மூன்று மாதங்கள் தேவைப்பட்டது. செயலியில் அகராதி, மொழிப்பெயர்ப்பு போன்றவையும் உள்ளன. இதன் மூலம் எளிதில் துளு மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர்-:.

