/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
அரசு வேலை கிடைக்கல என்றாலும் மனம் தளரல.....
/
அரசு வேலை கிடைக்கல என்றாலும் மனம் தளரல.....
ADDED : ஏப் 27, 2025 05:31 AM

நன்றாக படித்தும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்றால், மனம் தளர்ந்து விபரீத முடிவுகளை எடுப்பவர்களே நாம் பார்த்து உள்ளோம். அதே நேரத்தில் 'நெனைச்ச வேலை கிடைக்கலன்னா என்ன... கிடைச்ச வேலையில சந்தோஷமா இருப்போம்னு நினைக்குறவங்களும்' நிறைய பேர் உள்ளனர்.
இவர்களில் ஒருவர் தாவணகெரே தாலுகாவின் தும்பிகெரே கிராமத்தை சேர்ந்த நாகராஜப்பா. இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், செம்மறி ஆடு வளர்ப்பில் லாபம் ஈட்டி வருகிறார்.
தொழில் நஷ்டம்
இன்ஜினியரிங் பட்டதாரி டூ ஆடு வளர்ப்பு குறித்து நாகராஜப்பா கூறியதாவது:
எனக்கு சிறு வயதில் இருந்தே அரசு வேலைக்கு செல்லும் ஆசை இருந்தது. இன்ஜினியரிங் படித்த பின், அரசு வேலைக்காக நிறைய முயற்சி செய்தேன். ஆனால் அதிர்ஷ்டம் எனக்கு கை கொடுக்கவில்லை. இதனால் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் கான்ட்ராக்டர் வேலை செய்தேன்.
ஆடு வளர்ப்பில் எனக்கு ஆர்வம் இருந்தது. இதனால் வீட்டின் அருகே ஒரு ஆட்டு பண்ணை அமைத்தேன். ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்தேன்.
ஆனால் ஆடு வளர்ப்பு பற்றி போதிய அனுபவம் இல்லாததால், ஆடுகளை பராமரிக்க முடியவில்லை. இதனால் ஆடு வளர்ப்பு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது; பண்ணையை மூடி விட்டேன்.
பின், பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், துமகூரு, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களுக்கு சென்று செம்மறி ஆடுகளை எப்படி பராமரிப்பது, எப்படி வளர்க்கின்றனர் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொண்டேன்.
கால்நடை பராமரிப்பு துறை நடத்தும் பயிற்சி பட்டறைகளிலும் கலந்து கொண்டேன். பின், எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது.
கடவுள் ஆசிர்வாதம்
எனது நிலத்தில் மீண்டும் ஆட்டு பண்ணை அமைத்தேன். ஹாவேரி, ஹரிஹரா, ஹரப்பனஹள்ளி, ராணிபென்னுாருக்கு சென்று அங்கிருந்து செம்மறி ஆடு குட்டிகளை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்தேன்.
ஆடுகள் ஓரளவு வளர்ந்த பின், விற்பனை செய்ய ஆரம்பித்தேன். தற்போது மாதத்திற்கு 80,000 ரூபாய் வரை எனக்கு வருமானம் கிடைக்கிறது.
வாடிக்கையாளர்கள் எனது பண்ணையை தேடி வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். ஒரு தொழிலில் முன்னேற வேண்டும் என்றால் கடுமையான உழைப்பு இருப்பது அவசியம்.
கடந்த 1994 ம் ஆண்டு இன்ஜினியரிங் முடித்தேன். கடந்த 2013 வரை அரசு வேலைக்கு முயற்சி செய்தேன்.
எனது ஐந்து ஏக்கர் நிலத்தில் மக்காசோளம், சோயா பீன்ஸ், நிலக்கடலை பயிரிட்டு வளர்க்கிறேன்.
விவசாய துறை கடந்த 2023 ல் மாவட்ட அளவிலான சிறந்த விவசாயி விருது வழங்கி கவுரவித்தது. வாயில்லா ஜீவன்களை நன்கு பராமரிப்பது, கடவுளின் ஆசிர்வாதம் கிடைப்பது போன்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

