ராணுவத்தில் சேர இலவச பயிற்சி: முன்னாள் ராணுவ வீரர் அசத்தல்
ராணுவத்தில் சேர இலவச பயிற்சி: முன்னாள் ராணுவ வீரர் அசத்தல்
ADDED : ஜூன் 13, 2026 10:50 PM

- நமது நிருபர் -
பெலகாவி மாவட்டம் கதர்வாடி கிராமத்தை சேர்ந்தவர் அமித்ராஜு பிர்ஜே, 57. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. இவர், 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி, 2023ல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு, 2023ல், தனது ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இலவசமாக பயிற்சி அளிக்கிறார்.
இவரிடம், 196 இளைஞர்கள் பயிற்சி பெறுகின்றனர். தினமும் காலை, மாலை என விளையாட்டு மைதானங்களில் பயிற்சி அளிக்கிறார். இவருடைய பயிற்சி முறைகள் மிகவும் கடினமானது.
பெலகாவி மட்டுமின்றி, மஹாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி பயிற்சி அளிக்கிறார். இவரிடம் பயிற்சி பெற்ற, 38 ஆண்கள், நான்கு பெண்கள் ராணுவ வீரர்களாக உருமாறி உள்ளனர். இவரது சேவையை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
ராணுவ பயிற்சி பள்ளிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் போது, அமித்ராஜு எவ்வித லாபமுமின்றி, இலவசமாக பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, அமித்ராஜு பிர்ஜே கூறியதாவது:
ராணுவத்தில் சேருவதற்காக என் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்தேன். அவர்களுக்கு முறையான உடற்பயிற்சி வழிகாட்டுதல்களை வழங்கினேன். 2023 அக்டோபரில் பயிற்சி மையத்தை துவங்கினேன்.
முதலில் இரண்டு இளைஞர்களுக்கு மட்டும் இலவசமாக பயிற்சி அளித்தேன். நாளடைவில் இளைஞர்கள் அதிக அளவில் வந்தனர்.
என்னிடம் பயிற்சி பெற்ற, 42 பேர் ராணுவத்தில் தேர்வாகி உள்ளனர். இதை நினைக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கட்டணமாக வசூலிக்கப்படுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
