ADDED : செப் 13, 2025 11:14 PM

மிகவும் கூர்மையான கொடுக்குகளை கொண்ட தேனீ கொட்டினால் உடலில் கடுமையான வலி, தோல் சிவப்பு நிறமாக மாறுவது, வீக்கம், அரிப்பு உள்ளிட்டவை ஏற்படும். சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படும்.
ஒரு மனிதரை ஒரே நேரத்தில் பல தேனீக்கள் கொட்டினால் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். இதனால் தான் தேன் கூட்டில் கல்லை எறிந்து கலைக்கக் கூடாது என்று சொல்வர். தேனீக்கள் ஒரு இடத்தில் அதிகம் பறந்தாலே, அப்பகுதிக்குச் செல்லவே மக்கள் தயங்குவர். ஆனால் இங்கு ஒருவர் தேனீக்களின் காதலனாக உள்ளார்.
அன்பை பெற பயிற்சி தட்சிண கன்னடாவின் சுள்ளியா தாலுகா பெர்னாஜே கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் பெயரை கூறினாலே பெர்னாஜே கிராம மக்கள், தேனீ தாடி குமாரா என்று கேட்பர். 'என்ன தேனீ தாடி குமாரா' என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். குமாரின் முகத்தில் தாடி போன்று தேனீக்கள் மொய்ப்பதால் அவருக்கு அந்த பெயர் வந்துள்ளது.
இதுகுறித்து குமார் கூறியதாவது:
தேனீ வளர்ப்பில் எனக்கு சிறு வயதில் இருந்தே ஆர்வம் அதிகமாக இருந்தது. என் தந்தை நரசிம்மா தேனீ வளர்ப்பு தொழில் அதிகம் ஆர்வம் காட்டினார். அவரிடம் இருந்து நானும் தேனீ வளர்க்க கற்றுக் கொண்டேன். என் மனைவி, பிள்ளைகளுக்கும் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவது பற்றி சொல்லி கொடுத்துள்ளேன்.
தேனீக்கள் என்றாலே கொட்டும் என்று பலருக்கு பயம் உள்ளது. நாம் அதற்கு தொந்தரவு கொடுக்காத வரை, நம்மை தேனீக்கள் சீண்டாது. தேனீ வளர்ப்பு நிறுவனத்தில், தேனீக்கள் அன்பை பெறுவது எப்படி என்று பயிற்சி எடுத்துள்ளேன்.
தீ வைக்க கூடாது தேன் கூட்டை திறந்தாலே, தேனீக்கள் என் முகத்தில் தாடி போன்று கட்டிக் கொண்டுவிடும். இதனால் தான் என்னை தேனீ தாடி குமார் என்று அழைக்கின்றனர்.
என் நான்கரை ஏக்கர் நிலத்தில் 25க்கும் மேற்பட்ட இன தேனீக்களை வளர்க்கிறேன். வானிலையை பொறுத்து ஆண்டிற்கு இரண்டு, மூன்று முறை தேனீக்களை பிரித்து எடுக்கிறேன். ஒவ்வொரு தேனீ பெட்டியிலும் இருந்து தோராயமாக 10 முதல் 35 கிலோ வரை தேன் கிடைக்கிறது. தேனை விற்று ஆண்டிற்கு மூன்று லட்சம் வருமானம் கிடைக்கிறது.
தேனின் நிறம், சுவை, தரம் வானிலையை பொறுத்து மாறுபடும். நான் சந்தையில் சென்று தேனை விற்பது இல்லை. தேன் தேவைப்படுவோர் எங்கள் வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். தேனீ வளர்ப்புக்கு என் மனைவி சவுமியா, மகன்கள் நந்தன்குமார், சந்தன்குமார் உதவியாக உள்ளனர்.
தேன் கூட்டை தீ வைத்து அழிக்கக் கூடாது. அப்படி செய்தால் முழு தேனீ குடும்பமும் அழிந்துவிடும். தேனீ கொட்டினால் சிகிச்சை எளிது. தேனீ கொட்டிய இடத்தில் மஞ்சள் அல்லது தேனை தேய்த்தால் வேகமாக குணமடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -