/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
வாஜ்பாய்க்கு கார் ஓட்டிய குசாலப்பா
/
வாஜ்பாய்க்கு கார் ஓட்டிய குசாலப்பா
ADDED : டிச 28, 2025 04:58 AM

இந்திய அரசியல் அரங்கில், புதிய சகாப்தத்தை உருவாக்கியவர் என்ற பெருமை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு உண்டு. இப்படிப்பட்ட தலைவருக்கு கார் ஓட்டும் பாக்கியம், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம், பலேம்பியா கிராமத்தில் வசிக்கும் குசாலப்பாவுக்கு கிடைத்தது.
வாஜ்பாய்க்கு கார் ஓட்டிய அனுபவம் குறித்து, குசாலப்பா கூறியதாவது:
கடந்த, 1974ல் என் குடும்ப சூழ்நிலையால் கல்வியை தொடர முடியாத நிலையில், பெங்களூரு சென்றேன்.
வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே, கார் ஓட்டவும் கற்றுக் கொண்டேன். பின், ஜெர்மன் நாட்டின் தொழில் அதிபர் ஒருவருக்கு கார் ஓட்டினேன்.
பெங்களூரு அசோகா ஹோட்டலில் நடந்த, நான்காவது இந்திய திரைப்பட விழாவின் போது, நடிகர் ஷங்கர் நாக்கிற்கு கார் டிரைவராக இருந்தேன். ஷங்கர் நாக்கின் மூலம் அமிதாப் பச்சன், சத்ருகன் சின்ஹா, தர்மேந்திரா ஆகியோருக்கும் கார் ஓட்டி இருக்கிறேன்.
பிரதமராக இருந்த போது, வாஜ்பாய் ஒரு முறை பெங்களூரு வந்தார். பா.ஜ., மூத்த தலைவர் சிவப்பா கூறியதால், விமான நிலையத்தில் இருந்து வாஜ்பாயை காரில் அழைத்து வந்தேன். நன்றாக கார் ஓட்டி அவரது மனதில் இடம் பிடித்ததால், கார் ஓட்ட டில்லி வரும்படி எனக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று டில்லி சென்று, அவரது இல்லத்தில் தங்கி இரண்டு ஆண்டுகள் அவருக்காக ஓட்டி ஓட்டினேன். டில்லியில் இருந்து கர்நாடகா திரும்பிய போது, 'நல்ல டிரைவர், நன்றி' என்று எனக்கு பாராட்டு கடிதத்தை, வாஜ்பாய் வழங்கினார். அது எனக்கு கிடைத்த பொக்கிஷம்.
அரசியலில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், வாஜ்பாயின் மனிதநேயம் மாறவில்லை.
ஆணவம் அவரிடம் இருந்தது இல்லை. அவரது வீட்டில் வேலை செய்தோரை தன் குடும்பத்தில் ஒருவர் போல நடத்தினார். அவருக்கு கார் டிரைவராக இருந்தது மிக அருமையான நினைவுகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
குசாலப்பாவுக்கு வாஜ்பாய் எழுதி கொடுத்த கடிதம்.

