/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
கைதிகளின் மனதை மாற்றும் சக்தி படைத்த இலக்கியம்
/
கைதிகளின் மனதை மாற்றும் சக்தி படைத்த இலக்கியம்
ADDED : ஆக 16, 2025 11:23 PM

நம் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். இந்த சிறை தண்டனை வழங்கப்படுவதற்கு காரணம், குற்றம் செய்தவர் மனம் மாறி, பல நற்பண்புகளை கற்று புதிய மனிதராக மாற வேண்டும் என்பதே. ஆனால், நடைமுறையில் முதல் முறையாக குற்றம் செய்து சிறைக்கு செல்லும் பலரும், சிறையிலிருந்து வெளியே வரும்போது, குற்றவாளியாகவே வருகின்றனர். அவர்கள் விடுதலையாகி வெளியில் வந்தும், மீண்டும் குற்ற சம்பவங்களிலேயே ஈடுபடுகின்றனர்.
இந்த நிலைமையை மாற்றுவதற்காக கர்நாடகாவில் கைதிகளுக்கான 'இலக்கிய பட்டறை' திட்டம், கடந்த மே மாதம் கொண்டு வரப்பட்டது. இதை கன்னட இலக்கிய அகாடமி நடத்துகிறது. இத்திட்டத்தின் மூலம், கைதிகளுக்கு புத்தகங்கள் படிக்க வழங்கப்படும்.
புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்படும். கன்னட இலக்கியத்தில் உள்ள பல விஷயங்கள் குறித்து போதிக்கப்படும். இதில், இலக்கியவாதிகள் கைதிகளின் முன்னிலையில் சொற்பொழிவு நடத்துவர்.
இது போன்று, மைசூரு மத்திய சிறை, ஹாவேரி மாவட்ட சிறை, பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறை ஆகியவற்றில் நடத்தப்பட்டது. இதற்கு கைதிகள், சிறைச்சாலை வார்டன்களின் அமோக வரவேற்பு கிடைத்தது.
கவிதை போட்டி இதனால், கர்நாடகாவில் உள்ள முக்கிய சிறைகளில் ஒன்றான, பல முக்கிய குற்றவாளிகள் உள்ள பெங்களூரில் உள்ள பரப்பன அக்ராஹாரா சிறையில், இலக்கிய பட்டறை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு வரப்படுகிறது. இந்த பட்டறை மூன்று நாட்கள் நடக்கும். இலக்கியவாதிகளும் கலந்து கொண்டு உரையாற்றுவர். அப்போது, கைதிகளுக்கு கதை, கவிதை எழுதும் போட்டிகளும் நடத்தப்படும்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக இருக்கும் என தெரிகிறது. இச்சிறையில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் உள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இதுகுறித்து கன்னட இலக்கிய அகாடமியின் தலைவர் எல்.என்.முகுந்தராஜ் கூறுகையில், ''சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு, இலக்கியம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டால், அவர்களிடம் ஒரு சிறிய மாற்றம் ஏற்படுத்த முடியும். இதனால், பரப்பன அக்ரஹாரா சிறையில் இலக்கிய நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. விரைவில் பல சிறைகளில் அறிமுகப்படுத்தப்படும்,'' என்றார்
- நமது நிருபர் - .