/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பட்டம் பறக்கவிட பயன்படுத்தும் மாஞ்சா கயிற்றால் பாதிக்கும் பறவைகளை காத்து வரும் அமைப்பினர்
/
பட்டம் பறக்கவிட பயன்படுத்தும் மாஞ்சா கயிற்றால் பாதிக்கும் பறவைகளை காத்து வரும் அமைப்பினர்
பட்டம் பறக்கவிட பயன்படுத்தும் மாஞ்சா கயிற்றால் பாதிக்கும் பறவைகளை காத்து வரும் அமைப்பினர்
பட்டம் பறக்கவிட பயன்படுத்தும் மாஞ்சா கயிற்றால் பாதிக்கும் பறவைகளை காத்து வரும் அமைப்பினர்
ADDED : ஜன 18, 2026 05:39 AM

- நமது நிருபர் -:
பட்டம் விட பயன்படுத்தப்படும் மாஞ்சா கயிற்றால், மனிதர்களின் உயிர்கள் மட்டுமே போவதில்லை, வானத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய பறவைகளை காப்பாற்ற, பெங்களூரில் தனியார் தொண்டு நிறுவனமான, பி.எப்.ஏ., எனும், பீப்பிள் பார் அனிமல்ஸ் வன விலங்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
குளிர்காலம் முடிந்து விரைவில் கோடை காலம் துவங்கும் போது, காற்றின் அளவு ஒரே மாதிரி இருக்கும் என்று நினைப்பதால், பெரும்பாலானவர்கள் பட்டம் விட்டு மகிழ்வர். ஆரம்பத்தில் பட்டம் பறக்கவிட சாதாரண கயிறு பயன்படுத்தப்பட்டு வந்தது.
காலப்போக்கில் நைலானில் உடைந்த கண்ணாடி துகள்களை தடவி தயாரிக்கப்பட்ட மாஞ்சா கயிறு மூலம் பறக்கவிட துவங்கினர். இதனால், மற்ற காத்தாடிகள் இதன் கயிற்றை அறுக்க முயற்சித்தால், அவர்களின் காத்தாடி அறுந்து விடும்.
அதுமட்டுமின்றி, கண்ணாடி துகள்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட மாஞ்சா கயிறுகள், மரங்களிலும், மின் கம்பங்களிலும் சிக்கி விட்டால், பட்டம் பறக்க விட்டவர்கள், அதனை அகற்றாமல், அப்படியே விட்டு விடுவர். இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோரின் கழுத்தை, அந்த மாஞ்சா கயிறுகள் பதம் பார்த்து விடுகின்றன. சில சமயங்களில், கழுத்தை அறுத்து சிலர் மரணம் அடைந்த சம்பவங்களும் நடந்தது உண்டு.
பறவைகள் பாதிப்பு இதேபோன்று, வானத்தில் பட்டம் பறக்கும் போது, அவ்வழியாக செல்லும் சில பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால், அவைகளில் கால்களில் பாதிப்பு, சிறகுகள் முறிவு, கழுத்தில் காயம் போன்றவை ஏற்படுகின்றன.
அதனால், பறவைகள் உட்பட விலங்குகளை பாதுகாக்க, 1996ல் மஹாலட்சுமி பார்த்தசாரதி, நம்ரதா துகர், கவுரி மைனி ஹிரா, சுனிதா பிரபாகர் ஆகியோர் இணைந்து 'பி.எப்.ஏ., எனும், பீப்பிள் பார் அனிமல்ஸ் வனவிலங்கு மருத்துவமனையை பெங்களூரில் துவக்கினர்.
இதுவரை, 235 பல இனங்களை சேர்ந்த 48,331 விலங்குகளை மீட்டு, அவைகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம், விலங்குகள் இயற்கையான வாழும் இடங்களில், அவைகளை விடுவிப்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
தொட்டிகள் மருத்துவமனையின் வனவிலங்கு பிரிவு மூத்த மருத்துவரும், ராணுவத்தில், 30 ஆண்டுகள் பணியாற்றியவருமான டாக்டர் நவாஷ் ஷெரிப் கூறியதாவது:
பொங்கலை ஒட்டி, பட்டம் விடுவது அதிகரிக்கும். இந்நேரத்தில் பறவைகள் பாதிப்பதும் அதிகரிக்கிறது. சில நேரங்களில் பறவைகளின் இறக்கைகள் முறிந்தும், கால்கள் வெட்டப்பட்டும், கழுத்தில் காயம் ஏற்பட்டும் இறக்கின்றன.
சில பறவைகள் மரங்கள், மின் விளக்கு கம்பங்களில் சிக்கி தவிக்கின்றன. இதனால், அதன் சிறுகுகள் பாதிக்கப்படுகின்றன.
இத்தகைய பறவைகளுக்கு மீண்டும் இறகுகள் கிடைப்பதில்லை. எனவே தான் பெங்களூரின் விஜயநகர், கெங்கேரி உட்பட பல இடங்களில் சாலையில் விழும் இறகுகளை சேகரிக்க, 'தொட்டி'கள் அமைத்து உள்ளோம். அதுபோன்று பூங்காக்கள் வெளியேயும் பெட்டிகள் அமைத்து உள்ளேன்.
இந்த இறகுகள் சேகரித்து, அதனை சுத்தம் செய்து, மீண்டும் பறவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் பாதுகாக்கப்படும். இதுவரை எங்கள் மருத்துவமனையில், 32 இன பறவைகளின் இறகுகளை சேமித்து வைத்து உள்ளோம்.
எங்களுக்கு தகவல் கிடைத்து பறவையை மீட்க செல்லும் போது, பறவைகள் உயிருடன் தான் இருக்கும். ஆனால், உயிர் பயத்தில் பறக்க நினைப்பதால், பறவைகளின் இறகுகள் பெரும்பாலும் கீழே விழுந்து விடுகின்றன. அவைகளுக்கு சிகிச்சை அளித்தாலும், இறகுகள் இல்லாமல், அவைகளால் பறக்க முடியாது.
இந்நேரத்தில் பறவைகளுக்க, நாங்கள் சேகரித்து வைத்துள்ள இறகுகளை, அதன் சிறகுகளில் வைத்து சிகிச்சை அளிப்போம். அவைகளுக்கு புதிய இறகுகள் வளரும் வரை, நாங்களே பராமரித்து வருகிறோம்.
இறகுகள் வளர்ந்த பின், அவைகள் பறக்குமா என்பதை உறுதி செய்த பின்ன, பறக்கவிட்டு விடுவோம்.
பறவைகள் மட்டுமல்ல, சாலையில் விழுந்து கிடக்கும் மாஞ்சா கயிறுகளால் நாய்களும் பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்று உங்கள் வீடுகளின் அருகில் பறவைகள் சிக்கிக் கொண்டால், 080 - 2861 1986, 2861 2767 என்ற தொலைபேசி எண்ணிலும்; 99000 25370 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
18_Article_0001, 18_Article_0002, 18_Article_0003 பீப்பிள் பார் அனிமல்ஸ் வனவிலங்கு மருத்துவமனையை நிறுவியவர்கள். (அடுத்த படம்) இறகுகள் பாதித்த கழுகிற்கு சிகிச்சை அளிக்கும் குழுவினர். (கடைசி படம்) கழுகிற்கு மாற்று இறகுகள் வைக்கும் மருத்துவ குழு.

