ADDED : மே 04, 2025 04:55 AM

பெங்களூரின் சிவாஜி நகரை பற்றி, அறியாதவர்களே இருக்க முடியாது. இது நகரின் மிகவும் முக்கியமான வர்த்தக பகுதியாகும். இங்குள்ள ரஸ்ஸல் மார்க்கெட் வரலாற்று சிறப்பு பெற்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கட்டடமாகும். இது எப்போது, எதற்காக கட்டினர், இதன் பின்னணி என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா?
சிவாஜி நகர் மதச்சார்பற்ற பகுதியாகும். லட்சக்கணக்கான தமிழர்கள், கிறிஸ்துவர், இஸ்லாமியர், தெலுங்கர், கன்னடர், மராத்தியர் என, பல்வேறு சமுதாயத்தினரும் வசிக்கின்றனர்.
சிவாஜி நகரை சுற்றிலும் கோவில்கள், 300 ஆண்டுகள் பழமையான மசூதிகள், தேவாலயங்கள் உள்ளன. சிவாஜிநகர் இந்த அளவுக்கு பிரபலமடைய முக்கிய காரணம் ரஸ்ஸல் மார்க்கெட். இதை வைத்தே இப்பகுதியை அடையாளம் காண்கின்றனர்.
கடந்த 1820ல் கண்டோன்மென்டின் பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு தேவையான பொருட்களை விநியோகிக்கும் நோக்கில், சிவாஜி நகரில் கட்டடம் கட்டப்பட்டது. அற்புதமான கட்டட கலையை காணலாம்.
இன்றைய நவீன கட்டட வல்லுநர்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. 1920ல் இங்கு வர்த்தக மார்க்கெட் திறக்கப்பட்டது. இப்பகுதியில் எப்போதும் மக்கள் நெரிசலை காணலாம்.
சிவாஜி நகர் பஸ் நிலையத்தில் இருந்து, கூப்பிடு துாரத்தில் ரஸ்ஸல் மார்க்கெட் அமைந்துள்ளது.
காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், உலர் பழங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் என, மார்க்கெட்டில் கிடைக்காத பொருட்களே இல்லை.
ஷாப்பிங் செய்ய சிறந்த இடமாகும். கிராமங்களில் இருந்து தங்களின் உற்பத்திகளை, தினமும் காலை விவசாயிகள் மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்கின்றனர்.
மிகவும் குறைந்த விலைக்கு கிடைப்பதால், பெருமளவில் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். குறிப்பாக இங்கு இறைச்சி, உலர் பழங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன.
பெங்களூருக்கு பெருமை சேர்க்கும், வரலாற்று சிறப்புமிக்க ரஸ்ஸல் மார்க்கெட்டில், துாய்மை மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பது, வருத்தமான விஷயம்.
தினமும் காலை ஒரு முறை மட்டுமே, துாய்மை பணியாளர்கள், குப்பையை அள்ளுகின்றனர்.
அதன்பின் உருவாகும் கழிவுகள் மறுநாள் வரை, அங்கேயே கிடக்கின்றன. வியாபாரிகள் மிச்சமாகும் காய்கறிகள், இறைச்சி கழிவுகளை அங்கேயே கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. வாடிக்கையாளர்கள் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர்.
வரலாற்று சின்னமான ரஸ்ஸல் மார்க்கெட்டை, சீரமைத்தால் சிறந்த சுற்றுலா தலமாக மாறும். வரும் சந்ததியினருக்கு அறிமுகம் செய்ய வேண்டிய கட்டடத்தை, பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும் என, வரலாற்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
- நமது நிருபர் -
