/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
ஏழைகளின் நல்வாழ்வுக்கு வழி வகுத்தவர் பெயரில் சதுக்கம்
/
ஏழைகளின் நல்வாழ்வுக்கு வழி வகுத்தவர் பெயரில் சதுக்கம்
ஏழைகளின் நல்வாழ்வுக்கு வழி வகுத்தவர் பெயரில் சதுக்கம்
ஏழைகளின் நல்வாழ்வுக்கு வழி வகுத்தவர் பெயரில் சதுக்கம்
ADDED : ஆக 16, 2025 11:21 PM

மைசூரு 'அரண்மனை நகர்' என்றே பிரசித்தி பெற்றது. கர்நாடகாவின் முக்கியமான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். சுற்றுலா பயணியருக்கு மிகவும் பிடித்தமான நகராகும். மைசூரு நகரின் ஒவ்வொரு இடங்களும் ஒவ்வொரு வரலாற்று சிறப்பு கொண்டதாகும்.
மைசூரில் 'நஞ்சப்பா சதுக்கம்' மிகவும் பிரபலமான பகுதியாகும். இந்த பகுதிக்கு நஞ்சப்பா சதுக்கம் என்ற பெயர் வந்ததன் பின்னணியில், ஒரு சுவாரசியமான கதை உள்ளது. தன்னலம் இல்லாமல், ஏழைகளுக்கு சேவை செய்தவரின் பெயர், சதுக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
10 கடைகள் பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவை சேர்ந்தவர் நஞ்சப்பா, இவர் மைசூரு வந்து, நஞ்சுமளிகே சதுக்கத்தில் முதன் முறையாக இடம் வாங்கினார். தற்போதுள்ள நஞ்சுமளிகே, ஒரு காலத்தில் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து, வனம் போன்று இருந்தது. இத்தகைய இடத்தில் நஞ்சப்பா, 10 கடைகள் கட்டினார்.
வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து, பிழைப்பு தேடி மைசூருக்கு வந்த ஏழைகள் வியாபாரம் நடத்த, இந்த கடைகளை இலவசமாக கொடுத்தார். இவர் கடைகள் திறந்த பின், இப்பகுதி வர்த்தக பகுதியாக வளர்ச்சி அடைந்தது.
நஞ்சப்பா, மைசூரு அரண்மனையில், கூலி வேலையும் செய்தார். இதில் கிடைத்த ஊதியத்தை ஏழைகளுக்கு வழங்கினார். மடம் அமைத்து அங்கு சாது, சன்னியாசிகள், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தார்.
குருவிகள் கூடு நஞ்சப்பாவுக்கு பறவைகள், விலங்குகள் மீது அதிகமான அன்பு இருந்தது. மைசூரின் பல்வேறு இடங்களில், பசுக்கள் தண்ணீர் குடிக்க கல் தொட்டிகள் கட்டினார்.
குருவிகள் கூடு கட்ட வசதியாக, தன் வீட்டின் சுவற்றிலேயே ஓட்டைகள் தோண்டி வைத்திருந்தார். இப்போதும் அவரது வீட்டில், குருவிகள் கூடு கட்டி வசிப்பதை காணலாம். பசுக்களுக்காக அவர் அமைத்த தொட்டிகள், இப்போதும் நல்ல நிலையில் உள்ளன. தினமும் சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பப்படுகிறது.
நஞ்சப்பா கட்டிக்கொடுத்த கடைகளில், இப்போதும் வியாபாரிகள் பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள், கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் விற்று வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்கள் நஞ்சப்பாவை நன்றியுடன் நினைவு கூர்கின்றனர். ஏழைகளின் நல்வாழ்வுக்கு வழி வகுத்தவர், பசியோடு வந்தவர்களுக்கு உணவளித்தவர், கஷ்டம் என வந்தவர்களுக்கு உதவியவர். இவரது சேவையை அடையாளம் கண்டு, இப்பகுதிக்கு 'நஞ்சப்பா சதுக்கம்' என, பெயர் சூட்டப்பட்டது.
பாகல்கோட், பாதாமியில் இருந்து மைசூருக்கு வந்த நஞ்சப்பா தன் நற்பணிகள், இரக்க குணத்துடன், மற்றவருக்கு முன் மாதிரியாக வாழ்ந்தார். இன்றும் இவரது பெயர் நிலைத்து நிற்கிறது.
- நமது நிருபர் -