/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
அரசு பள்ளிக்கு 'மறுவாழ்வு' கொடுத்த மாணவர்கள்
/
அரசு பள்ளிக்கு 'மறுவாழ்வு' கொடுத்த மாணவர்கள்
ADDED : ஆக 16, 2025 11:22 PM

பொதுவாக அரசு பள்ளி என்றாலே பழைய கட்டடத்தில் செயல்பட கூடியது; குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இருக்காது; ஆசிரியர்கள் சரியாக பாடம் சொல்லி கொடுப்பரா என்ற எண்ணம் பெற்றோருக்கு எழுவது உண்டு. இதனால் தான் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்.
ஆனாலும் ஒரு சில அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து, மற்ற பெற்றோருக்கு முன்உதாரணமாக திகழ்கின்றனர். பல அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், பள்ளிகள் மூடும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மூடும் நிலையில் இருந்த அரசு பள்ளிக்கு, முன்னாள் மாணவர்களால் மறுவாழ்வு கிடைத்துள்ளது.
வாட்ஸாப் குழு துமகூரின் குனிகல் தாலுகா தொட்டமதுரே கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் ஒரு காலத்தில், அம்மனஹட்டி, நரகஹள்ளி, சிங்கட்டிஹள்ளி, கொட்டிகெரே, எடியூர், தொட்டமதுரே உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர்.
அடிப்படை வசதி இல்லாதது உட்பட பல காரணங்களால், கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இதனால் பள்ளி மூடும் நிலைக்கு சென்றது.
புதிய வேன் இதுபற்றி அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவர் பிரகாஷ் 'வாட்ஸாப்'பில், முன்னாள் மாணவர்கள் குழுவை உருவாக்கி, பள்ளியின் நிலை குறித்து தெரிவித்தார்.
தங்கள் படித்த பள்ளியை மூட விட கூடாது என்று கருதிய முன்னாள் மாணவர்கள், தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாக உறுதி அளித்தனர். பள்ளிக்கு முதலில் என்ன தேவை என்று ஆசிரியர்களிடம் சென்று கேட்டபோது, 'மாணவர்களை அழைத்து வரவும், கொண்டு சென்று விடவும் வேன் தேவை உள்ளது.
'வேன் கிடைத்தால் 12 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளை 'பிக் அப் டிராப்' செய்ய முடியும். இதன் மூலம் பள்ளிக்கு குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்' என்றனர்.
இதையடுத்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து, தங்கள் கையில் இருந்து 18 லட்சம் ரூபாய் போட்டு, வேன் வாங்கிக் கொடுத்தனர். விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்ததுடன், 'ஹைடெக்' வகுப்பறை அமையவும் ஏற்பாடு செய்தனர்.
கணினி, அறிவியல் ஆய்வகமும் அமைத்து கொடுத்தனர். பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பது பற்றி தெரிந்ததால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆரம்பித்து உள்ளனர். தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
''அரசு பள்ளியை, கர்நாடக பப்ளிக் பள்ளிக்கு இணையான தரத்தில் மாற்றுவது எங்கள் குறிக்கோள். இப்பள்ளியை மாநிலத்தின் முன்மாதிரி பள்ளியாக மாற்றுவோம்,'' என, முன்னாள் மாணவர் பிரகாஷ் கூறி உள்ளார்.
- நமது நிருபர் -