வீட்டையே கார்ட்டூன் மயமாக மாற்றிய கா ர் ட் டூ னி ஸ்ட்
வீட்டையே கார்ட்டூன் மயமாக மாற்றிய கா ர் ட் டூ னி ஸ்ட்
ADDED : ஜன 25, 2026 05:21 AM

- நமது நிருபர் -
மங்களூரில் சிறப்பான வீடு ஒன்றுள்ளது. இந்த வீட்டினுள் சென்றால் மீண்டும் வெளியே வருவதற்கே மனம் வராது. அப்படிப்பட்ட அற்புத காட்சிகள் மனதை சுண்டி இழுக்கின்றன. மக்களை இப்படியும் கவரலாம் என்பதற்கு அந்த வீடே சாட்சியாகும்.
தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு நகரின், சக்தி நகரில் கார்ட்டூனிஸ்ட் பிரகாஷ் ஷெட்டி வசிக்கிறார். இவர் மிகவும் திறமையான கலைஞர். தன் கை வண்ணத்தால், வீட்டையே கார்ட்டுன் மயமாக மாற்றியுள்ளார். வீட்டின் பெயர் பலகையும் கார்ட்டூன் ஸ்டைலில் அமைத்துள்ளார். வீட்டின் முன் பகுதியில், கம்பாலாவில் எருமையை விரட்டும் கார்ட்டூன்; திண்ணையில் பாட்டியும், பேத்தியும் உரையாடும் கார்ட்டூன்கள் காண்போரை வியக்க வைக்கின்றன.
வீட்டுக்குள் கால் பதித்தால் சுவர்கள் கதை பேசுவதை காணலாம். ஜன்னல்கள், கதவுகளில் பலவிதமான கார்ட்டூன்கள் வீட்டை உயிரோட்டமாக வைத்துள்ளன. பூனைகள், மீன்கள், ஸ்கூட்டரில் செல்லும் நபர்கள் கார்ட்டூன் வடிவில் தென்படுகின்றன. சுவிட்ச் போர்டையும் அவர் விட்டு வைக்கவில்லை.
சமையல் அறைகள், மீன் மார்க்கெட், மீன் வாங்குவது, சமையல் செய்யும் பெண்களின் கார்ட்டூன்களை காணலாம். வீட்டுக்குள் பெரிய டைனோசர் ஓவியமும் கவனத்தை ஈர்க்கிறது. இதன் வால் சமையல் அறை வரை நீண்டுள்ளது. அந்தந்த அறைக்கு தகுந்தார் போன்று, கார்ட்டூன்கள் வரைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் மேனை அழைக்கும் சிறுவன், கணவரை துாக்கி வீசும் மனைவி கார்ட்டூன்களையும் பார்த்து ரசிக்கலாம். இவரது வீட்டில் கார்ட்டூன் கண்காட்சியை பார்க்க, தினமும் மக்கள் ஆர்வமாக வருகின்றனர்.
கலைஞர் பிரகாஷ் ஷெட்டி கூறியதாவது:
வீடு கட்டுவது எனக்கு கனவாக இருந்தது. அது வெறும் வீடாக மட்டும் இருக்க கூடாது. மக்களின் கண்களுக்கு வித்தியாசமாக அமைய வேண்டும் என, விரும்பினேன். வீட்டையே கார்ட்டூன் உலகமாக மாற்றினேன். எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும்.
டைனிங் ஹாலில் நாங்கள் சாப்பிடும் போது, பூனைகளும் சாப்பிடுவது போன்று தென்பட வேண்டும் என்பதால், அனைத்து சுவிட்ச் போர்டிலும் பூனைகள் வரைந்துள்ளேன்.
வீடு முழுவதும் கார்ட்டூன் வரைய, இரண்டரை மாதமானது. 18 அடி உயர சுவர்களில், ஏணி மீது நின்று பணியாற்றினேன். சார்லி சாப்ளின் எனக்கு பிடித்தமானவர். கல்லுாரி நாட்களில் இருந்தே, அவரை பார்த்து வளர்ந்தவன். யாரும் சார்லி சாப்ளினை கலரில் பார்த்தது இல்லை.
என் வீட்டில் கலரில் பார்க்கலாம். காந்தியையும் இங்கு காணலாம். இந்த ஓட்டு வீடு கார்ட்டூன்களால் அலங்கரிக்கப்பட்ட வீடு மட்டுமல்ல. ஒரு கலைஞன் தன் வாழ்க்கை, சமுதாய சிந்தனைகளை பற்றி சுவர்கள் மூலமாக பேசும் ஒரு இடம். பார்ப்போரை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் ஒரு அற்புதமான வீடாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
