/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பின்தங்கிய குக்கிராமத்தை தத்தெடுத்த டாக்டர்
/
பின்தங்கிய குக்கிராமத்தை தத்தெடுத்த டாக்டர்
ADDED : ஜூலை 19, 2025 11:21 PM

கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டிருந்த குக்கிராமத்துக்கு, தற்போது நல்ல காலம் வந்துள்ளது. இக்கிராமத்தை டாக்டர் ராஜன் தேஷ்பாண்டே தலைமையிலான தன்னார்வ தொண்டு அமைப்பு தத்தெடுத்துள்ளது. தங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என, கிராமத்தினர் நம்புகின்றனர்.
தார்வாட் மாவட்டத்தில், மடக்கிகொப்பா என்ற குக்கிராமம் உள்ளது. இது தார்வாட் நகரில் இருந்து 33 கி.மீ., தொலைவில் இருந்தும், தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். வெறும் 100 பேர் வசிக்கும் கிராமத்தில், 14 முதல் 15 வீடுகள் உள்ளன. பால் உற்பத்தியே முக்கியமான தொழில் என்பதால், இங்கு மக்கள் தொகையை விட, பசுக்களின் எண்ணிக்கையே அதிகம். கிராமத்தை அரசு கண்டு கொள்வதில்லை,
தத்தெடுப்பு
நல்ல சாலைகள், மருத்துவ வசதி உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், மக்கள் அவதிப்பட்டனர். சமீபத்தில் டாக்டர் ராஜன் தேஷ்பாண்டே இக்கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தினார். அப்போது, இங்கு சரியான இணைப்பு வசதிகள் இல்லாததை கவனித்தார். மக்களின் வாழ்க்கை தரமும் சரியாக இல்லாததால், வருத்தம் அடைந்த அவர், மடக்கிகொப்பா கிராமத்தை தத்தெடுத்தார்.
இவரது தலைமையிலான, தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலம் கிராமத்தை மேம்படுத்துகிறார். மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்கிறார். 'நமக்கு நல்ல காலம் பிறந்தது' என, மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து ராஜன் தேஷ்பாண்டே கூறியதாவது:
மடக்கிகொப்பா கிராமத்தில் 2010ல், மருத்துவ முகாம் நடத்தினேன். அப்போது சரியான அடிப்படை வசதிகளே இல்லை என்பதை கவனித்தேன். அதன்பின் சமீபத்தில், அதே கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்திய போது, எந்த மாற்றங்களும் ஏற்படாதது தெரிந்தது.
குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாமல், சிறார்கள், மூத்த குடிமக்கள் அவதிப்படுவதை கவனித்தேன்.
கிராமத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. கிராமத்தினர் வாழ்க்கை தரத்தை ஆய்வு செய்தேன். கல்வி, மருத்துவ வசதிகளும் இல்லாமல் வாழ்வதை தெரிந்து கொண்டோம்.
வெள்ளி விழா
எங்கள் தொண்டு அமைப்பு துவங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, வெள்ளி விழா நடத்த திட்டமிட்டோம். இந்த நாளில் கிராமத்தை தத்தெடுக்க முடிவு செய்தோம்.
கிராமத்தினரின் பொருளாதார முன்னேற்றம், தரமான கல்வி, மருத்துவ வசதிகள் உட்பட, அனைத்து அடிப்படை வசதிகள் செய்ய திட்டம் வகுத்துள்ளோம்; படிப்படியாக செயல்படுத்துகிறோம். முதற்கட்டமாக பெண்கள், குழந்தைகளுக்கு கல்வி அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மடக்கிகொப்பா கிராமத்தினர் கூறியதாவது:
எங்கள் பிரச்னைகளை காது கொடுத்து கேட்கவும், தீர்வு காணவும் யாரும் இல்லை. யாரும் வரமாட்டார்கள் என, நினைத்திருந்தோம். ஆனால் இப்போது எங்களுக்கு உதவ, டாக்டர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கிராமத்தில் ஒரே ஒரு பள்ளி மட்டுமே உள்ளது. இது பெயருக்கு மட்டுமே உள்ளது. அடிப்படை வசதிகளும் இல்லை. குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் இருந்தது. இப்போது பள்ளிக்கு தேவையான வசதிகளை டாக்டர் செய்து தருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.