/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
கல்லுாரி காவலாளிக்குள் ஒளிந்திருக்கும் அசாத்திய திறமை
/
கல்லுாரி காவலாளிக்குள் ஒளிந்திருக்கும் அசாத்திய திறமை
கல்லுாரி காவலாளிக்குள் ஒளிந்திருக்கும் அசாத்திய திறமை
கல்லுாரி காவலாளிக்குள் ஒளிந்திருக்கும் அசாத்திய திறமை
ADDED : நவ 23, 2025 04:18 AM

பெங்களூரு புறநகரின் ஆனேக்கல்லில் வசிப்பவர் விஜய், 45. இவருக்கு சிறு வயதிலேயே, நாடகத்தில் ஆர்வம் ஏற்பட்டது, மனதுக்கு தோன்றியதை நடித்துக் காட்டுவார். இதை கவனித்த தாய், அவரை நாடக பயிற்சி மையத்தில் சேர்த்து, பயிற்சி பெற வைத்தார். தாயின் ஊக்கத்தால்
விஜயின் நடிப்பு திறனும், தன்னம்பிக்கையும் அதிகரித்தன.
புராண நாடகங்கள் நாடகக் குழுவில் சேர்ந்து, ஏராளமான புராண நாடகங்களில் நடித்தார். விதுரன், கர்ணன், அர்ஜுனன், தர்மர் உட்பட பல்வேறு கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார்.
தன் 16வது வயதில் பெங்களூரின் கலாசேத்திராவில், புராண நாடகத்தில் சகுனி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விருது பெற்றார். இந்த வாய்ப்பு அவருக்கு எதிர்பாராமல் கிடைத்தது.
போதிய ஒத்திகை இல்லாமல் நடிக்க நேரிட்டது. அந்த கதாபாத்திரத்தில் நாடக ஆசிரியர் ஜெயராம், சகுனியாக நடிக்க வேண்டியிருந்தது.
அவருக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதால், இறுதி விநாடியில் விஜய்க்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அற்புதமாக நடித்திருந்தார்.
சில காலத்துக்கு பின், நாடக ஆசிரியர் ஜெயராம் காலமானார். இவர் விஜய்க்கு குருவாக இருந்தவர்.
குரு காலமான பின், நாடக குழுவை விட்டு வெளியேறினார். தன் 17வது வயதில், விஜய் தன் பெற்றோரை இழந்து மங்களூருக்கு சென்றார். ஹோட்டலில் சப்ளையராக பணியாற்றினார். பணி நெருக்கடிக்கு இடையிலும், அவ்வப்போது மனதில் தோன்றும் நாடக வசனங்களை கூறி, அனைவரையும் மகிழ்விப்பார். நாடகம் மீதான அவரது ஆர்வம் குறையவில்லை.
ஏழு ஆண்டுகளுக்கு பின், மங்களூரின் செயின்ட் அலாஷியஸ் கல்லுாரியில் காவலாளியாக பணியில் அமர்ந்தார். அப்போதும் அவருக்குள் இருந்த நாடக ஆர்வம் மறையவில்லை.
கல்லுாரி நிகழ்ச்சியில் நாடகம் நடத்த, மாணவர்கள் பயிற்சி பெறும்போது, அவருக்குள் இருந்த நாடக கலைஞன் வெளியே வருவார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, விஜயின் நாடக பின்னணி பற்றி, பேராசிரியர் கிறிஸ்டிக்கு தெரிந்தது.
ஆரவாரம் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், விஜய் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். மேடையில் அவர், புராண சகுனி கதாபாத்திரத்தில் நடித்து காண்பித்தார். இதை பார்த்து மாணவர்கள் மெய் மறந்தனர். எந்த ஒத்திகையும் பார்க்காமல், வசனங்களை பேசி நடித்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
எப்போதோ நடித்த கதாபாத்திரத்தை, வசனங்களை மறக்காமல் பேசி, நடித்து அசத்தினார். மாணவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். மாணவர்களின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் மீது அதிக பாசம் காண்பித்தனர்.
கல்லுாரியில் பட்டப்படிப்பு முடிந்து, வெளியே சென்ற மாணவர்கள், இப்போதும் அவருக்கு போன் செய்து, அன்போடு விசாரிக்கின்றனர். கல்லுாரி முதல்வர் உட்பட அனைவரும் அன்பாக நடத்துகின்றனர். படிப்பு முடிந்து செல்லும் மாணவர்கள், விஜயுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அனைவரின் அன்பும் இவருக்கு கிடைக்க, நாடக திறனும் காரணமாக இருந்தது.
சிலர் தோற்றத்தில் எளிமையாக தென்படலாம். அவர்களுக்குள் அசாத்தியமான திறமை ஒளிந்திருக்கும். அதே போன்று கல்லுாரி ஒன்றில், காவலாளியாக பணியாற்றும் விஜய்க்குள், ஒரு நடிகர் ஒளிந்திருக்கிறார். அவர், மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
உதவும் குணம் நாங்கள், விஜயை காவலாளியாக பார்க்கவில்லை. எங்களில் ஒருவராக பார்க்கிறோம். மற்றவருக்கு உதவும் குணமும் இவரிடம் உண்டு. யாருக்கு பிரச்னை என்றாலும், உதவிக்கு செல்வார். மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். எங்கள் மையத்தில் மாலை நேரத்தில், நாடக பயிற்சி நடக்கும். அப்போது மாணவர்களுக்கு நாடக ஒத்திகை பார்க்க உதவுவார். 30 ஆண்டுகளுக்கு முன்பு நடித்திருந்த கதாபாத்திரத்தின் வசனங்களை, இப்போதும் மறக்காமல் பேசுவது, ஆச்சரியமான விஷயம். கிறிஸ்டோபர் டிசோசா, இயக்குனர், நாடக மையம், செயின்ட் அலாஷியஸ் கல்லுாரி
- நமது நிருபர் -

