/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே... அம்மாவை வணங்காத நாள் இல்லையே!
/
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே... அம்மாவை வணங்காத நாள் இல்லையே!
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே... அம்மாவை வணங்காத நாள் இல்லையே!
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே... அம்மாவை வணங்காத நாள் இல்லையே!
ADDED : ஜூலை 26, 2025 11:07 PM

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது பழமொழி. தற்போதைய காலத்தில் பலரும் சுயநலமாக வாழ்கின்றனர். வயதான தாய், தந்தையிடம் சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு, வீட்டை விட்டு விரட்டுவதும், கோவிலுக்கு அழைத்து செல்வதாக நம்ப வைத்து, கண் காணாத இடத்தில் விட்டு செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.
அனைத்து வசதிகள் இருந்தும், பெற்றோரை முதியோர் இல்லத்தில் சிலர் சேர்க்கின்றனர். இத்தகைய மனிதர்களுக்கிடையே, தாய், தந்தையை தெய்வமாக போற்றி வணங்கும் பிள்ளைகளும் இருப்பது, ஆறுதலான விஷயமாகும். காலமான தங்கள் தாய்க்கு கோவில் கட்டி வணங்கி, ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர்.
தாய் மீது உயிர் ஹாவேரியின் பாளூரு தாண்டா கிராமத்தில் வசித்தவர் ஹேமலவ்வா. இவருக்கு அன்னப்பா லமானி, நுாரப்பா, தாவரெப்பா, வீரப்பா என்ற நான்கு மகன்கள் உள்ளனர். சிறு வயதில் கணவரை இழந்த ஹேமலவ்வா, கூலி வேலை செய்து மகன்களை வளர்த்தார்; நன்றாக படிக்க வைத்தார். அன்னப்பா தன் தாய் மீது உயிரையே வைத்திருந்தார்.
அரசு பணியில் உள்ள அன்னப்பா, பெங்களூரில் வசிக்கிறார். தாயை மிகவும் அன்போடு பராமரித்தார். 1998ல் ஹேமலவ்வா உடல் நலம் பாதிப்படைந்து காலமானார். தாயின் நினைவாக அன்னப்பாவும், அவரது சகோதரர்களும், சொந்த கிராமத்தில் தாய்க்காக கோவில் கட்டியுள்ளனர். ஐந்து லட்சம் ரூபாய் செலவில், 2010ல் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு ஹேமலவ்வாவின் மூன்றரை அடி சிலை வைத்துள்ளனர். அன்று முதல் தினமும் கோவிலில் பூஜை நடக்கிறது. இதற்கு 'மாதாஜி கோவில்' என, பெயர் சூட்டியுள்ளனர்.
உகாதி, பஞ்சமி, நவராத்திரி, தீபாவளி உட்பட மற்ற சிறப்பு நாட்களில் இந்த கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருகின்றனர்.
அன்னப்பா பெங்களூரில் வசித்தாலும், விடுமுறை கிடைக்கும் போது, தாயின் கோவிலுக்கு வருகிறார். குடும்பத்துடன் நாள் முழுதும் இங்கேயே இருக்கிறார். தாயின் மடியில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுவதாக பெருமை கொள்கிறார்.
தாய்க்கு கோவில் இது தொடர்பாக, அன்னப்பா கூறியதாவது:
எங்கள் தாய் உயிரோடு இருந்த போது, அவரை நன்றாக பார்த்து கொண்டோம். அவரது மறைவை எங்களால் தாங்க முடியவில்லை. அவரது நினைவு நிரந்தரமாக இருக்க வேண்டும் என, விரும்பினோம். என்ன செய்யலாம் என, பெரியவர்களிடம் ஆலோசனை கேட்ட போது, கோவில் கட்டும்படி கூறினர். அதன்படி நாங்கள் தாய்க்கு கோவில் கட்டினோம்.
நான் பெங்களூரில் வசிக்கிறேன். பாளூர் கிராமத்தில் வசிக்கும் என் சகோதரர்களே தினமும் தாயின் கோவிலுக்கு சென்று பூஜை செய்கின்றனர். பாளூர் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள், எங்கள் தாயின் கோவிலுக்கு வந்து, வணங்கி செல்கின்றனர்.
நான் பெங்களூரில் வீடு கட்ட முடிவு செய்துள்ளேன். இதற்காக தாயின் கோவிலுக்கு சென்று ஆசி பெற்றேன். தாய் நடமாடும் கடவுள். நாம் அவரை பூஜிக்க வேண்டும். இதைத்தான் நானும், என் சகோதரர்களும் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .