தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ பாக்கு வெட்டும் இளைஞர்கள்

 பாக்கு வெட்டும் இளைஞர்கள்

 பாக்கு வெட்டும் இளைஞர்கள்


ADDED : பிப் 01, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக படித்த இளைஞர்கள், உடம்பில், கை, கால்களில் அழுக்குப்படாத வகையில், அலுவலகத்தில் நாசுக்கான வேலைகளை செய்யவே விரும்புவர். ஆனால், சில இளைஞர்கள் விதிவிலக்காக உள்ளனர். பெங்களூரில், 40,000 ரூபாய் சம்பளத்தில் செய்த வேலையை விட்டு விட்டு, கிராமத்திற்கு சென்று பாக்கு வெட்டும் பணி செய்கிறார் ஒருவர்.

கொரோனா தொற்று மக்களை படுத்திய பாட்டை, பலர் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அந்த நேரத்தில் மூடப்பட்டன.

பல ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்து, சொந்த கிராமத்துக்கு சென்றனர். பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்யவும் துவங்கினர். சொந்த நிலம் இல்லாதவர்கள், குத்தகைக்கு நிலம் பெற்று காய்கறிகள், தானியங்கள், பழங்கள் பயிரிட்டனர்.

கொரோனா கட்டுக்குள் வந்து, நிறுவனங்கள் செயல்பட துவங்கியும், சிலர் பணிக்கு திரும்பவில்லை. கிராமத்திலேயே விவசாயம் செய்கின்றனர். இவர்களில் பவன் என்ற இளைஞரும் ஒருவர்.

சிக்கமகளூரு மாவட்டம், களசா தாலுகாவில் உள்ள, ஹிரேபைல் எடூரு கிராமத்தில் வசிப்பவர் பவன். இவர் கொரோனாவுக்கு முன், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 40,000 ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். கொரோனா நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பவன் வேலையை விட்டு விட்டு சொந்த கிராமத்துக்கு சென்றார். அதன்பின் பெங்களூருக்கு செல்லவில்லை.

தன் ஊரிலேயே பாக்கு மரம் ஏறி, பாக்கு வெட்டும் வேலை செய்கிறார். பெங்களூரில் சம்பாதித்ததை விட அதிகமாக சம்பாதித்து, நிம்மதியாக வாழ்க்கை நடத்துகிறார். நிறுவனத்தினர் அழைப்பு விடுத்தும் செல்லவில்லை.

இவரது நண்பர்கள் பூர்ணேஷ், அஷ்வத்தும் கூட, இதே பணியை செய்கின்றனர். எங்கு பாக்கு வெட்ட வேண்டும் என்றாலும், இம்மூன்று இளைஞர்களை அழைத்துச் செல்கின்றனர்.

இதற்கு முன் விவசாயிகள், பாக்கு வெட்ட கூலியாட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இப்போது மூன்று இளைஞர்களிடம், பாக்கு அறுவடை வேலையை ஒப்படைத்து விட்டு நிம்மதி அடைகின்றனர். சிக்கமகளூரு முழுதும் இவர்கள் பிரபலம். பவன், பூர்ணேஷ், அஸ்வத் ஆகியோரை, மக்கள், 'மூன்று முத்துக்கள்' என்றே அழைக்கின்றனர். 120 முதல் 150 அடி உயரமான பாக்கு மரங்களில் ஏறி, பாக்கு குலைகளை வெட்டுவது, அவ்வளவு எளிதான வேலை அல்ல.

ஆனால், மூவரும் இந்த வேலையை சுறுசுறுப்புடன் செய்கின்றனர். காற்று வீசும் போது, இவர்கள் கயிற்றில் தொங்கியபடி மரத்துக்கு மரம் தாவி செல்லும் காட்சி, நடுநடுங்க வைக்கிறது. இவர்கள் யாரிடமும் அநியாயமாக கூலி கேட்பது இல்லை. நியாயமான கூலியை பெறுவதால், கிராமத்தினருக்கு பிடித்தமான இளைஞர்களாக உள்ளனர்.

பவன் கூறியதாவது:

கொரோனாவுக்கு பின், சொந்த ஊருக்கு வந்த நான், மீண்டும் அங்கு செல்ல விரும்பவில்லை. அங்கு சம்பாதித்த பணத்தை விட, கிராமத்தில் அதிகம் சம்பாதிக்கிறேன். பரபரப்பான நகர வாழ்க்கையை விட, அமைதியான கிராமத்து வாழ்க்கை அழகானது.

பெங்களூரில் எப்போதும் பணி அழுத்தம், போக்குவரத்து நெருக்கடி இருக்கும். கிராமத்தில் நாங்கள் ராஜாவை போன்று நிம்மதியாக இருக்கிறோம். நகருக்கு செல்ல விரும்பவில்லை.நண்பர்கள் சேர்ந்து பாக்கு வெட்டும் வேலை செய்கிறோம். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us