UPDATED : ஜூலை 26, 2026 11:20 AM
ADDED : ஜூலை 17, 2026 07:31 PM

பல பழக்கங்கள் இன்று நம்மிடம் இருந்து மறைந்து போனாலும் ஒரு சில பழக்கங்கள் இன்னும் நம் ரத்தத்தில் ஊறி, நம் அன்றாட வாழ்வில் ஒன்றாக கலந்துள்ளன. நம் முன்னோர்கள் எந்த ஒரு காரியத்தையும் அறிவியலை கொண்டு மெய்ப்பிக்க முடியாது என்பதால் தான், சாஸ்திர, சம்பிரதாயங்களாக வகுத்து வைத்து சென்றுள்ளனர். இவை ஒவ்வொன்றுக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது.
அழகுக்காக மட்டுமே இன்று பெண்களின் மத்தியில் பிரபலமாக இருக்கம் மருதாணி இட்டுக் கொள்ளும் பழக்கத்துக்கு பின் ஆரோக்கியமும் இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
மருதாணி இலைகளைப் பறித்து, வீடு முழுவதும் மணம் பரவும் வகையில், அம்மியில் அரைத்து, இரவு சாப்பிட்ட பின் கை, கால் விரல்களுக்குத் தொப்பி போல வைத்து, துாங்கி எழுந்ததும் கைகளைக் கழுவி, 'யாருக்கு நன்றாக சிவந்துள்ளது' என, ஒப்பிட்டு மகிழ்ந்த காலம், இன்றைய குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
இயற்கையின் கொடையான மருதாணியைப் பயன்படுத்தி வந்தால், அழகும் ஆரோக்கியமும் நிரந்தரம்.
மருதாணியின் மருத்துவப் பலன்கள்:
மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும்.
சருமப் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம். மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் தேய்க்கலாம். கண் எரிச்சல், கை,கால் எரிச்சல் குணமடையும். நகப்புண், நகச்சுத்திக்கு மருதாணி இலைகளை அரைத்து, அதன் மேல் கட்டினால், விரைவில் குணமாகும். மருதாணியைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்டவேண்டும். இதை, 'இலை ஊறல் குடிநீர்' என்பர். இந்த நீரைத் தொடர்ந்து, 20 நாட்கள் குடித்துவந்தால், மேகச்சொறி, படை நீங்கும். பேதி, சீதபேதி கட்டுப்படும்.
காயம்பட்ட இடத்தில், 'இலை ஊறல் நீரை' விட்டு, ஒத்தடம் கொடுத்தால், கிருமித்தொற்று ஏற்படாது. விரைவில் குணமாகும். மருதாணி இலைச்சாற்றை, 10 மி.லி., எடுத்து, அதனுடன் பாலை கலந்து குடித்துவந்தால், கை, கால் வலி நீங்கும். மருதாணி விதையைத் தணலில் போட்டு, உடலில் புகை படும்படி இருந்தால், வெண்புள்ளிகள் மறையும். மருதாணி இலைச்சாறு, தண்ணீர், சர்க்கரையைக் கலந்து குடித்துவந்தால், விந்து எண்ணிக்கை பெருகும்.
மருதாணி மிகவும் குளிர்ச்சியானது என்பதால் உட்கொள்ளும்போது, சிலருக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாதாம் பிசின் கலந்து பயன்படுத்தலாம்.
