UPDATED : ஜூன் 27, 2026 05:32 PM
ADDED : ஜூன் 27, 2026 04:10 PM

அழகு பராமரிப்பில் இன்று எத்தனையோ புதிய தயாரிப்புகள் வந்துவிட்டாலும், பெண்களின் மேக்கப் கிட்டில் எப்போதும் முதலிடம் பிடிப்பது 'பவுண்டேஷன்' தான்.
அதிலும், 'மேட் பவுண்டேஷன்' முக்கியமானது. முகம் முழுக்க ஒரே சீரான பொலிவைத் தருவதில் இதற்கு நிகர் எதுவுமில்லை என்கிறார், அழகுகலை நிபுணர் ரம்யா.
பவுண்டேஷனில் 'டியூவி' (Dewy), 'மேட்' (Matte) என இரு வகைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
'டியூவி' முகத்திற்கு ஒருவித ஈரப்பதமான பளபளப்பான தோற்றத்தை தரும். 'மேட் பவுண்டேஷன்' முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணெய் பசையை உறிஞ்சி, வெல்வெட் போன்ற மென்மையான, நேர்த்தியான தோற்றத்தை கொடுக்கும்.
உங்களுக்கு எண்ணெய் பசை அல்லது காம்பினேஷன் ஸ்கின் டைப் ஆக இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு 'மேட் பவுண்டேஷன்' தேர்வு செய்யலாம்.
இது முகத்தில் வழியும் எண்ணெயை கட்டுப்படுத்தி, நாள் முழுவதும் மேக்கம் கலையாமல் பார்த்துக் கொள்ளும்.
சிலருக்கு காற்றில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக முகம் சீக்கிரம் வியர்த்து, மேக்கப் டல்லாகிவிடும்; அவர்களுக்கு இந்த மேட் பவுண்டேஷன் ஒரு வரப்பிரசாதம்.
காலையில் அலுவலகம் செல்லும் போது ஒருமுறை பயன்படுத்தினால், மாலை வரை முகம் ப்ரெஷ் ஆக இருக்கும்.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்களின் வடுக்கள் மற்றும் தழும்புகளை மறைப்பதில் மேட் பவுண்டேஷன் கில்லாடி!
