/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கர்நாடகாவின் 2 வது மிகப்பெரிய எய்யனகெரே ஏரி
/
கர்நாடகாவின் 2 வது மிகப்பெரிய எய்யனகெரே ஏரி
ADDED : மார் 06, 2025 12:12 AM

சிக்கமகளூரில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில், எய்யனகெரே ஏரியும் ஒன்றாகும். இது, கர்நாடகாவின் இரண்டாவது பெரிய ஏரியாகும்.
ஹொய்சாளா வம்சத்தின் சக்கராயபட்டணாவை ஆட்சி செய்த ருக்மாங்கதா ராயர் மன்னர் 1156ம் ஆண்டு இந்த ஏரியை வெட்டினார். இந்த ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்காக, 10 கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கால்வாய் மூலம் 15 கி.மீ., தொலைவு வரை உள்ள பல கிராமங்களில் உள்ள 3,854 ஏக்கர் விவசாய நிலத்துக்கு தண்ணீர் செல்கிறது.
தங்களின் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட, தனிமையை விரும்புவோர், நண்பர்களுடன் செல்வோருக்கு இது சிறந்த தேர்வாகும். மலைகளுக்கு இடையே அமைந்து உள்ள, இந்த ஏரியின் வசீகரம், அமைதி, பசுமை உங்களுக்கு மன நிறைவை தரும். ஏரியை சுற்றி, பாதி துாரத்துக்கு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையின் முடிவில், ஏரி நிரம்பினால், தண்ணீர் வெளியேறவும் வழி வகை செய்துள்ளனர்.
மழை காலத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடும் நேரத்தில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இங்கு தண்ணீர் வழிந்தோடும் பகுதியில் குழந்தைகள், நண்பர்களுடன் குளிக்கின்றனர். 'குட்டி' அருவி போன்று கொட்டி, தண்ணீர் தேங்கும் இடத்தில் குதித்து குழந்தைகள் கும்மாளம் இடுகின்றனர்.
அவர்கள் விளையாடுவதை பார்க்கும் போது, நம்முடைய குழந்தை பருவம் நினைவுக்கு வரும். நாமும் அவர்களுடன் குழந்தைகளாக மாறிவிடலாமா என்று எண்ணத் தோன்றும். அந்தளவு அதனை வடிவமைத்து உள்ளனர்.
இந்த ஏரியின் கரையில் நின்று சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்கலாம். இங்கு மீன்கள் பிடிக்கலாம், முகாம் அமைக்கலாம், படகு சவாரியும் உள்ளது. கோடை காலத்தில் செல்வோர் வெப்பத்தில் இருந்து உங்களின் தோலை பாதுகாக்க, சன் கிரீம், கூளிங் கிளாஸ் எடுத்து செல்லவும்.
ஏரியின் அருகில் தின்பண்டங்கள் உட்பட ஹோட்டல்கள் எதுவும் இல்லை. எனவே, நீங்கள் வரும் போது தேவையான தின்பண்டங்கள், குடிநீர் கொண்டு சென்று விடுங்கள். இந்த ரம்மியமான காட்சியை எப்போதும் நினைவில் கொள்ள, கேமரா, மொபைல் போனை மறந்து விடாதீர்கள்.
ஆண்டு முழுதும் இப்பகுதி குளிர்ச்சியாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வரலாம். ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலத்தில் இப்பகுதி பசுமை போர்த்தியது போல காட்சி அளிக்கும்.
எப்படி செல்வது?
▶ பெங்களூரு விமான நிலையம், சிக்கமகளூருக்கு அருகில் உள்ளது. எனவே, விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 200 கி.மீ., தொலைவில் உள்ள எய்யனகெரே ஏரிக்கு, டாக்சியில் செல்லலாம்
▶ ரயிலில் செல்வோர், கடூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள ஏரிக்கு, பஸ், டாக்சியில் செல்லலாம்
▶ பஸ்சில் செல்வோர் கடூர் பஸ் நிலையத்தில் இறங்கி, 22 கி.மீ., தொலைவில் உள்ள ஏரிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
- நமது நிருபர் -