ADDED : மே 14, 2025 11:18 PM

துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது சித்தர்கள் மலை. 1,700 அடி உயரம் கொண்ட இம்மலையில், சித்தலிங்கேஸ்வரா கோவில், குகைகள் உள்ளன.
மலையின் உச்சியில், 13ம் நுாற்றாண்டில் கருங்கராயா மன்னரால் கட்டப்பட்ட கோட்டை பாழடைந்து காணப்படும். தங்க மலை என்று அழைக்கப்பட்ட இம்மலையில், தன் படையினருடன் தங்கி, பல போர்களில் வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது.
இங்குள்ள குகைகளில், சித்தர்கள் தவம் செய்ததாக கூறப்படுகிறது. அது தவிர, இங்கு பல மருத்துவ குணம் கொண்ட செடிகளும் உள்ளன. ஆன்மிகத்துக்காக பக்தர்கள் வருகின்றனர்.
அதேவேளையில், பாறைகள் நிறைந்த இம்மலைக்கு மலையேற்றம் செய்யவும், சாகசம் விரும்புபவர்களும் என பலரும் வருகின்றனர். இம்மலையில் இருந்து பார்த்தால், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களும் தெரிவதால், மலையேற்றம் செய்பவர்கள் பலர் மீண்டும் மீண்டும் இங்கு வருகின்றனர்.
மலையின் அடிவாரத்தில் சித்தேஸ்வர சுவாமியின் இயற்கையான குகை கோவில் உள்ளது. நான்கு கி.மீ., துாரம் நடக்க வேண்டிய இம்மலையில், படிக்கட்டுகளுடன் மலையேற்றம் துவங்குகிறது.
பின்னர், செங்குத்தான, கரடுமுரடான படிக்கட்டில் ஏற வேண்டும். செல்லும் வழியில், பெரிய பாறைகள், குகைகளை கடந்து செல்ல வேண்டும். மலையில் உள்ள சித்தேஸ்வர சுவாமி கோவிலை சென்றடைய 45 நிமிடங்களாகும்.
கோவிலில் இருந்து வலதுபுறம் சென்றால், மலையின் உச்சிக்கு செல்லலாம். செல்லும் வழியில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட 'அலசந்தேகெரே' குளம் அமைந்திருக்கும்.
மலையேற்றம் தவிர, இங்குள்ள குகைகள் பலரை ஆச்சர்யப்பட வைக்கும். தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.
- நமது நிருபர் -