/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
உத்தர கன்னடா மாவட்டத்தில் 32 'டிரெக்கிங்' பாதைகள்
/
உத்தர கன்னடா மாவட்டத்தில் 32 'டிரெக்கிங்' பாதைகள்
ADDED : ஏப் 10, 2025 05:26 AM

கார்வார்: உத்தர கன்னடா மாவட்டத்தில் 32 இடங்களில் டிரெக்கிங் பாதைகள் இருப்பதாக, கலெக்டர் லட்சுமி பிரியா கூறியுள்ளார்.
பெங்களூரில் ஐ.டி., நிறுவனங்களில் பணி செய்பவர்கள் வார இறுதி நாட்களில் தங்கள் குழுவினருடன் இணைந்து, 'டிரெக்கிங்' எனும் மலையேற்றும் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பெங்களூரு ரூரல் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏராளமான டிரெக்கிங் பாதைகள் உள்ளன. இதுதவிர சிக்கமகளூரு, தட்சிண கன்னடாவிலும் டிரெக்கிங் செல்லும் இடங்கள் உள்ளன.
இந்நிலையில், தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா நேற்று அளித்த பேட்டி:
'காணப்படாத உத்தர கன்னடா' என்ற தலைப்பில் தனியார் நிறுவனங்கள் உதவியுடன், உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், மக்களால் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் பற்றி ஆய்வு நடத்தினோம். இந்த ஆய்வின்படி மாவட்டத்தில் 32 டிரெக்கிங் பாதைகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இங்கு டிரெக்கிங் செல்ல சுற்றுலா பயணியருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று, முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.
அனுமதி கிடைத்த பின், 32 டிரெக்கிங் பாதையில், சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுவர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை காணாத பகுதிகளை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கலாம். அனுபவம் வாய்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர், டிரெக்கிங் செல்லும் குழுவுடன் செல்வார். மலையேற்றம் குறித்து மாவட்ட நிர்வாகம், சுற்றுலா துறை மூலம் விளம்பரப்படுத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.