/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
அழகிய தீவுகளின் அதிசய கூட்டம் அந்தமான்
/
அழகிய தீவுகளின் அதிசய கூட்டம் அந்தமான்
ADDED : நவ 03, 2024 11:10 AM

போர்ட்பிளேர் விமான நிலையத்தில் இறங்கியதும் அங்குள்ள சுவர்களில் மான்கள், பழங்குடியினர் சுதை ஓவியங்கள் கண்ணைக் கவர்கின்றன. விமான நிலைய வெளிப்பகுதியில் உள்ள வீரசாவர்க்கரின் வானுயர சிலை நம்மை வாவென்று அழைப்பது போலிருக்கும்.
ரசனைக்கு விருந்து ராஸ் தீவு
சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1941களில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சில காலம் அங்கு தங்கி சுதந்திரத்திற்காக பாடுபட்டதை நினைவு கூரும் வகையில் 2018ல் ராஸ் தீவு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவாக பெயர் மாற்றப்பட்டது.
எங்கு செல்வதாக இருந்தாலும் படகு மூலமே செல்ல வேண்டும். 20 பேர் முதல் 100 பேர் செல்லும் வகையில் படகுகள் உள்ளன. இரண்டரை மணி நேர பயணத்தில் ராஸ் தீவை அடையலாம். அங்கிருந்து வாகனங்கள் மூலம் கலங்கரை விளக்க பகுதிக்கு அழைத்து செல்கின்றனர்.
பிரிட்டிஷ் காலத்தில் தலைமை கமிஷனர் வாழ்ந்த பங்களா, மருத்துவமனை, சர்ச் கட்டடங்களின் இடிபாட்டு எச்சங்கள் மிச்சமிருக்கின்றன. பேட்டரி காரில், சிதிலமடைந்த கட்டடங்களை ரசித்துக் கொண்டே கலங்கரை விளக்கத்திற்கு செல்லலாம்.
அங்கிருந்து மரப்படிக்கட்டுகளையும் கற்கால படிக்கட்டுளையும் கடந்து சென்றால் கடல் நடுவே உள்ள பாலத்தை அடையலாம். பாலத்தின் கீழே உள்ள பாறைக்கூட்டங்களில் அலை அடித்து செல்லும் அழகை ரசிக்கலாம்.
ராஸ் தீவில் இருந்து 2 மணி நேர பயணத்தில் நார்த் பே தீவு சென்றால் அங்கு வெள்ளை மணலும் நீர் விளையாட்டுகளும் பிரசித்தம். இந்திய 20 ரூபாய் நோட்டில் நார்த் பே தீவின் இயற்கை காட்சி அச்சிடப்பட்டிருக்கும். நீச்சல் தெரிந்தவர்களுக்கு ஸ்கூபா டைவிங், நீச்சல் தெரியாதவர்களுக்கு 'ஸ்னார்க்ளிங்' எனப்படும் கடலின் 20 மீட்டர் ஆழம் வரை பிரத்யேக உடை, தலை கவசம், சுவாச கருவிகளுடன் அழைத்துச் செல்கின்றனர். ஆழ்கடலின் பவளப்பாறைகள், மீன்கூட்டங்களை தண்ணீருக்கு அடியில் சென்று பார்க்கலாம். நாம் ரசிப்பதை வீடியோ எடுத்து தருகின்றனர். அதற்கு தனி கட்டணம்.
தமிழில் பேசி சாப்பாடு
நீந்தி களைத்தால் சுடச்சுட சைவ, அசைவ உணவுகள் தயாராக உள்ளன.மொழி பிரச்னையே இங்கில்லை. சாப்பாடு இருக்கு… வாங்க என்று தமிழில் பேசி நம்மை பிரமிக்கச் செய்கின்றனர். உணவு, துணி, கைவினைப் பொருள் கடைகள் உள்ளன. அனைத்திலும் தமிழில் பேரம் பேசி வாங்க முடிகிறது.
செல்லுலார் சிறை வரலாறு
அழகின் அதிசயமாக அந்தமானை நாம் கொண்டாடினாலும் அதன் அடிவேர் இந்திய சுதந்திரத்திற்கான வேதனைச் சுவடு நிறைந்தது.
சுதந்திரத்திற்காக போராடியவர்கள் போராட துாண்டியவர்களை தனிமைப்படுத்துவதற்காகவே அந்தமான் தீவில் தனிச்சிறைகள் அமைக்கப்பட்ட வரலாறு இன்றும் நம் முன் கட்டடமாக காட்சிதருகிறது. 'எல்' வடிவ கட்டடத்தின் மூன்று தளங்களிலும் 13 அடி நீளத்தில் 7 அடி அகலத்தில் தனிச்சிறைகள் சோகச்சித்திரங்களாக நம் நெஞ்சை வதைக்கிறது.
பத்தடி உயரத்திற்கு மேல் சிறிய ஜன்னல் வழியாக வரும் பகலின் வெளிச்சம் தான் தியாகிகளுக்கான ஒரே ஆறுதல். மரச்சட்டத்தின் மேல் கைகள் கட்டப்பட்ட நிலையில் தியாகிகள் இப்படித்தான் துன்புறுத்தப்பட்டனர் என்பதை சொல்லும் சிலையை சிறையின் முன்புறத்தில் பார்க்கமுடியும். மரணதண்டனை கூடத்தை தனியாக வைக்கவில்லை. சிறையின் முன்பக்கத்தில் தனியறை வைத்து ஒரே நேரத்தில் மூன்று பேரை துாக்கிலிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கையில், கழுத்தில், காலில் சங்கிலிகளுடன் தேங்காய் உரிப்பது, செக்கில் எண்ணெய் ஆட்டி பிழிவது, துணி நுால் நுாற்பது என மிகக்கடும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
சில கைதிகளின் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் சணல் சாக்கால் தைத்த உடைகள் வழங்கியதை சிற்பங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இரவு 7:00 மணிக்கு லேசர் ேஷா தியாகிகள் அனுபவித்த சித்ரவதையை விவரிக்கின்றது. சுதந்திர போராட்டத்தில் நாம் ஈடுபட்டதை போன்ற உணர்வு நம்மை உலுக்குகிறது.
ஹவ்லக் தீவு
ஹவ்லக் தீவிற்கு செல்ல கப்பல் தான் சரியான தீர்வு. நீரை கிழித்து கப்பல் சென்றாலும் அது நிற்பது போலவே தோன்றும். முன்பக்க கண்ணாடி வழியாக ஓங்கி எழும் ராட்சத அலைகளை கடந்து செல்வதை பார்க்கும் போது பயமும் பிரமிப்பும் நம்மை தாக்கும். ஹவ்லக் தீவில் உள்ள ராதாநகர் பீச் வெண்மணலுக்கும், நீலவானுக்கும், துாய்மைக்கும் பெயர் பெற்றது.
நீளமான மரப்பலகைகளால் ஆன இருக்கைகள், சாய்வு படுக்கைகள், கரையோர தென்னை மர கூட்டங்கள், ஓயாமல் அடித்து அடித்து வெண் நுரையை கக்கும் அலைகள், வானின் நீலத்தோடு போட்டியிடும் பெருங்கடல், வெண்நுரைக்கு ஈடுகொடுக்கும் வெண்ணிற வானம் என… மனம் எதை ரசிப்பது என்று தெரியாமல் திகைத்து நிற்கும். பின் மெல்ல தெளிந்து அத்தனையையும் கண்கள் அள்ளிப்பருகும். குப்பையை எங்கும் அந்தமானில் பார்க்க முடியாது.
அழகும் ஆச்சரியமும் கூடவே வரலாற்று சுவடுகளின் தேடலும் உங்களின் விருப்பம் என்றால் ஒருமுறை அந்தமான் செல்லுங்கள்.