/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கர்நாடகாவின் சுவிட்சர்லாந்து சக்லேஷ்புராவை சுற்றலாமா?
/
கர்நாடகாவின் சுவிட்சர்லாந்து சக்லேஷ்புராவை சுற்றலாமா?
கர்நாடகாவின் சுவிட்சர்லாந்து சக்லேஷ்புராவை சுற்றலாமா?
கர்நாடகாவின் சுவிட்சர்லாந்து சக்லேஷ்புராவை சுற்றலாமா?
ADDED : ஜூலை 10, 2025 03:39 AM

ஹாசன், மலைகள் நிறைந்த மாவட்டமாகும். இதன் அனைத்து தாலுகாக்களிலும், இயற்கை எழில் நிறைந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக சக்லேஷ்புரா, 'கர்நாடகாவின் சுவிட்சர்லாந்து' என, அழைக்கப்படுகிறது. மழைக்காலம் உட்பட அனைத்து பருவ காலங்களிலும் பார்க்க வேண்டிய அற்புதமான இடங்கள் உள்ளன.
சுற்றுலா பயணியரின் விருப்பமான இடங்களில் சக்லேஷ்புராவும் ஒன்றாகும். ஹொய்சாளர்களின் ஆட்சி காலத்தில், மிக முக்கியமான இடமாக இருந்தது. கடல் மட்டத்தில் இருந்து, 950 மீட்டர் உயரத்தில் உள்ள சக்லேஷ்புரா, கர்நாடகாவின் அமைதியான மலைப் பிரதேசமாகும். ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருக்கும் அற்புதமான இடமாகும்.
கண்களுக்கும், மனதுக்கும் இதமளிக்கும் இயற்கை காட்சிகள், அடர்த்தியான வனப்பகுதிகள், சலசலவென பாய்ந்தோடும் ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், காபி, டீ, ஏலக்காய் எஸ்டேட்டுகள், மிளகு, பாக்கு தோட்டங்களை காண்பது, இனிமையான அனுபவம் அளிக்கும்.
சக்லேஷ்புராவில் உள்ள கோட்டையும், பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகும். 1792ல் திப்பு சுல்தான் கட்டிய மஞ்சராபாத் கோட்டை, நட்சத்திர வடிவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணியர் மேற்கு தொடர்ச்சி மலைகளை காண விரும்பினால், சக்லேஷ்புராவின் பிஸ்லே வியூ பாயின்டுக்கு வரலாம். சக்லேஷ்புராவில் இருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ள இந்த இடத்தில் நின்றால், தொட்டபெட்டா, புஷ்பகிரி, குமார பர்வதா என, மூன்று மலைகளின் வரிசையை பார்க்கலாம். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
ஹேமாவதி ஆறு, காவிரியின் துணை ஆறாகும். இது, சக்லேஷ்புரா வழியாக பாய்கிறது. இயற்கை காட்சிகளுக்கு இடையே ஹேமாவதி ஆறு பாய்வதை காணலாம். இங்குள்ள இயற்கை காட்சிகளை காண, ஆற்றங்கரைக்கு அதிகமானோர் வருகின்றனர். அமைதியான, பசுமையான சூழலில் சிறிது நேரம் பொழுது போக்கினால், மனமும், உடலும் புத்துணர்சி பெறும்.
சாகச பிரியர்களுக்கு, அக்னிகுட்டா பேவரிட் ஸ்பாட். அக்னிகுட்டா என்றால், 'எரியும் பர்வதம்' என, அர்த்தமாகும். சக்லேஷ்புராவில் இருந்து 35 கி,மீ,, தொலைவில் உள்ளது. இந்த மலையில் ஏறுவது, பெரும் சவாலான விஷயமாகும். ஏன் என்றால், மலைப்பாதை கரடு முரடானது. இதில் ஏறுவது எளிதான விஷயம் அல்ல.
ஜேனுகுட்டா என, அழைக்கப்படும் மற்றொரு மலை, சக்லேஷ்புராவில் இருந்து, 40 கி.மீ., தொலைவில் உள்ளது. இது கர்நாடகாவின், இரண்டாவநு மிகப்பெரிய மலையாகும். இதன் உச்சியில் நின்று பார்த்தால், மேற்கு தொடர்ச்சி மலைகளின் அற்புதமான காட்சிகளை காணலாம்.
சக்லேஷ்புராவில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் மூகனமனே நீர் வீழ்ச்சி உள்ளது. சக்லேஷ்புராவில் காபி தோட்டங்கள் ஏராளம். இவை, சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கின்றன. இயற்கை அழகு கொட்டி கிடக்கும் காரணத்தால், சக்லேஷ்புராவை, 'கர்நாடக சுவிட்சர்லாந்து' என, அழைக்கின்றனர்.
- நமது நிருபர் -