ADDED : ஏப் 09, 2026 02:02 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் உள்ளன. அனைத்துமே சுற்றுலா தலங்களாக, சுற்றுலா பயணியரை தன் வசம் சுண்டி இழுக்கின்றன. இவற்றில் காயத்ரி அணையும் ஒன்றாகும்.
மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய நோக்கத்துக்காக, அன்றைய மன்னராட்சி காலத்தில், அணைகள் கட்டப்பட்டன. கே.ஆர்.எஸ்., லிங்கனமக்கி, ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கட்டபிரபா, மல்லப்பிரபா உட்பட, பல அணைகள் உள்ளன. அதே போன்று, சித்ரதுர்காவில் காயத்ரி அணை அமைந்துள்ளது. இயற்கை எழில் மிகுந்த இடத்தில் இந்த அணையை பார்க்க, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
ரூ.40 லட்சம் சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவின் ஜவனகொண்டனஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட கரியாலா கிராமத்தில் சுவர்ணமுகி ஆற்றுக்கு குறுக்கே, காயத்ரி அணை கட்டப்பட்டது. உடையார் காலத்தில், 1963ல் இந்த அணை 40 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டது.
அன்றைய சித்ரதுர்கா மாவட்ட போர்டு தலைவராக இருந்த வக்கீல் கெஞ்சப்பா, ஜெயசாமராஜ உடையாரை வரவழைத்து, அடிக்கல் நாட்ட வைத்தார். இந்த அணைக்கு ஜெயசாம ராஜேந்திர உடையார் குடும்பத்தை சேர்ந்த காயத்ரி தேவியை நினைவுகூரும் வகையில், அவரது பெயரே சூட்டப்பட்டது.
காயத்ரி அணை 14,000 ஏக்கர் விவசாய நிலத்துக்கு, நீர்ப்பாசன வசதி தருகிறது. அணை 145 அடி உயரம் கொண்டதாகும். வலது புறத்தில் 16 கி.மீ., கால்வாய், இடது புறத்தில் 7 கி.மீ., கால்வாய் கொண்டுள்ளது.
நிலத்தடி நீர் கர்நாடகாவின் சிறிய அணைகளில், பிரபலமான சுற்றுலா தலங்களில், இதுவும் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். அமைதியான சூழ்நிலையில், இயற்கை காட்சிகள் சூழ்ந்த இடத்தில், காயத்ரி அணை உள்ளது. வார இறுதி நாட்களில் சுற்றுப்புற நகரங்களின் மக்கள், அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
ஆண்டு தோறும் மழைக்காலத்தில் அணை நிரம்புகிறது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது.
காயத்ரி அணை ஹிரியூர் தாலுகாவுக்கு மட்டுமின்றி, துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின், ஹுனசேஹள்ளி, உஜ்ஜனகுன்டே, மேளகோடே உட்பட பல கிராமங்களின் விவசாயிகளின் உயிர் நாடியாக உள்ளது. இந்த அணை 2017ல் இரண்டு முறை நிரம்பியது. இதை பார்க்க சுற்றுலா பயணியர் கூட்டம், கூட்டமாக வந்தனர். இப்போதும் அணை சுற்றுலா தலமாகவே விளங்குகிறது.
எப்படி செல்வது? 1 பெங்களூரில் இருந்து 150 கி.மீ., சித்ரதுர்காவில் இருந்து 65 கி.மீ., ஹிரியூரில் இருந்து 20 கி.மீ., தொலைவில் காயத்ரி அணை உள்ளது. அனைத்து பகுதிகளில் இருந்தும், ஹிரியூருக்கு அரசு பஸ்கள், ரயில்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஹிரியூரில் இறங்கி வாடகை வாகனத்தில், அணைக்கு செல்லலாம். கோடைக் காலத்திலும் நீர் இருப்புள்ளது.
2 பார்வை நேரம்: காயத்ரி அணையை பார்க்க நேர கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்படவில்லை. வனம், மலைகள் சூழ்ந்த இடத்தில் அணை இருப்பதால், இருள் சூழ்வதற்குள் திரும்புவது நல்லது.
3 கில் உள்ள தலங்கள்: சித்ரதுர்கா கோட்டை, வாணி விலாஸ் அணை, ஜோகிமட்டி வன விலங்குகள் சரணாலயம்.
