தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ மக்களை ஈர்க்கும் ஹெப்பால் ஏரி

மக்களை ஈர்க்கும் ஹெப்பால் ஏரி

மக்களை ஈர்க்கும் ஹெப்பால் ஏரி


ADDED : ஜூலை 16, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரின், மிகவும் பழமையான, பிரபலமான ஏரிகளில் ஹெப்பால் ஏரியும் ஒன்று. இது பல அபூர்வமான பறவைகளின் புகலிடமாகவும் விளங்குகிறது. வெளிநாட்டு பறவைகள், ஹெப்பால் ஏரிக்கு வந்து, இன விருத்தி செய்து கொள்கின்றன.

ஹெப்பால் ஏரி 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடா, தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, ஆயிரக்கணக்கான ஏரிகளை உருவாக்கினார்.

ஆனால் பல ஏரிகள், தற்போது கட்டடங்களாக மாறியுள்ளன. தப்பிப்பிழைத்த ஏரிகளில், ஹெப்பால் ஏரியும் ஒன்று. இதை 1537ல் கெம்பே கவுடா உருவாக்கினார்.

சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான பகுதிகளில், இந்த ஏரி முக்கியமானது. விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் பொழுதுபோக்குகின்றனர்.

இயற்கையான சூழலில் ஏரி அமைந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து, பெங்களூருக்கு வரும் பலரும் ஹெப்பால் ஏரியை கண்டு ரசிக்கின்றனர். இப்பகுதியை மாநில அரசு சுற்றுலா தலமாக மேம்படுத்தியுள்ளது.

ஏரியின் மத்தியில் இரண்டு செயற்கை தீவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தீவுகளில் பறவைகள் வசிக்கின்றன. கூட்டம், கூட்டமாக பறவைகளை காண்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஏரியை ஒட்டி அழகான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.

வண்ண மயமான பூச்செடிகள் மனதை மயக்குகிறது. ஏரி வளாகத்தில் நின்று சூர்யோதயம், சூர்ய அஸ்தமனத்தை பார்ப்பது, புதிய அனுபவத்தை அளிக்கும். இதற்காகவே காலை, மாலையில் நுாற்றுக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர்.

தினமும் இளைஞர்கள், இளம்பெண்கள், மூத்த குடிமக்கள், சிறார்கள் நடை பயிற்சிக்கு வருகின்றனர். தூய்மையான காற்றை சுவாசித்தபடி நடக்கின்றனர். பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி, அமைதியாக பொழுதுபோக்க விரும்புவோருக்கு, ஹெப்பால் ஏரி தகுதியான இடமாகும். படகு சவாரியும் உள்ளது. படகில் சென்றபடி பறவைகளை, இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்.

எப்படி செல்வது?

ஹெப்பால் பெங்களூரின் பிரபலமான பகுதியாகும். நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாடகைக்கார், ஆட்டோ வசதிகளும் உள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் பல ரயில்கள், ஹெப்பால் ஸ்டேஷனில் நின்று செல்கின்றன. இங்கு இறங்கி வாடகை கார் அல்லது ஆட்டோவில் ஹெப்பாலுக்கு வரலாம்.பார்வை நேரம்: காலை 7:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை.



- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us