/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
சுற்றுலா பயணியரை கவரும் ஹொன்னமேட்டி எஸ்டேட்
/
சுற்றுலா பயணியரை கவரும் ஹொன்னமேட்டி எஸ்டேட்
ADDED : பிப் 05, 2025 09:38 PM

கர்நாடகா - தமிழக மாநில எல்லையில் உள்ளது சாம்ராஜ் நகர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஹனுார் தாலுகா பிளிகிரிரங்கணபெட்டாவில் ஹொன்னமேட்டி மலைப்பகுதி உள்ளது. மலை உச்சியில் ஒற்றை பாறை உள்ளது. இந்த பாறையின் மீது ஏறி நின்று எதிர்திசையில் பார்த்தால், பச்சைப் போர்வை போர்த்திய இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.
மேலும் அந்த பாறையை சுற்றி மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான புற்கள் வளர்ந்து உள்ளன. அந்த பாறை ஒரு புவியியல் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு சுற்றுலா வருபவர்கள் பாறையின் மீது ஏறி நின்று, இயற்கை அழகை கண்டு ரசிப்பதுடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
பாறை பகுதியில் சுற்றி பார்த்து விட்டு கீழே இறங்கி வரும் வழியில், எஸ்டேட் உள்ளது. பச்சை பசேலென காட்சி அளிக்கும் எஸ்டேட்டில் சில வீடுகள் உள்ளன.
அங்கு வனத்துறையில் வேலை செய்பவர்கள் வசிக்கின்றனர். வாய்ப்பு இருந்தால் சுற்றுலா செல்பவர்கள் எஸ்டேட் பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானைகளை பார்க்கலாம். காபி பழங்களையும் பார்த்து ரசிக்கலாம்.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வீடுகள், கோவில்கள் என எஸ்டேட்டில் உள்ள அனைத்து இடங்களும் சுற்றுலா பயணியரை கவரும் வகையில் இருக்கும்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து ஹனுார் 154 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது. சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து சாம்ராஜ்நகருக்கு பஸ் இயக்கப்படுகிறது. அங்கு சென்று அங்கிருந்து ஹனுார் செல்லலாம். ஹனுாரில் இருந்து வாடகை கார்களில் ஹொன்னமேட்டி எஸ்டேட்டை அடையலாம். ரயிலில் செல்பவர்கள் சாம்ராஜ் நகர் சென்று அங்கிருந்து ஹனுார் சென்று ஹொன்னமேட்டியை அடையலாம்.
- நமது நிருபர் -