/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கூகுளில் அதிகமாக தேடப்படும் லால்பாக் பூங்கா
/
கூகுளில் அதிகமாக தேடப்படும் லால்பாக் பூங்கா
ADDED : டிச 18, 2025 07:02 AM

நடப்பாண்டு சுற்றுலா பயணியர், கூகுளில் அதிகமாக தேடிய இடங்களின் பட்டியலில் பெங்களூரின் லால்பாக் பூங்கா முதல் இடம் பிடித்துள்ளது.
பெங்களூரின் லால்பாக் பூங்கா வரலாற்று பிரசித்தி பெற்றது. 240 ஏக்கரில் அமைந்துள்ள பூங்காவில், ஆயிரக்கணக்கான அபூர்வ மரங்கள், பூச்செடிகள் உட்பட பல்வேறு தாவரங்கள் நிறைந்துள்ள அழகான பூங்கா சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது.
மஹாராஜாக்கள் ஹைதர் அலி காலத்தில் 1760ல், லால்பாக் பூங்கா அமைக்கும் பணி துவங்கி, திப்பு சுல்தான் காலத்தில் முடிந்தது. பூங்காவில் நடுவதற்காக, பெர்ஷியா, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து செடிகள், மரக்கன்றுகள் இறக்குமதி செய்யப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சியில் மைசூரு மஹாராஜாக்களிடம் பூங்கா ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் பூங்கா படிப்படியாக மேம்படுத்தப்படுகிறது.
ஆரம்பத்தில் 45 ஏக்கரில், லால்பாக் பூங்கா அமைக்கப்பட்டது. அதன்பின் 240 ஏக்கரில் விஸ்தரிக்கப்பட்டது. இங்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மலர் கண்காட்சி நடக்கிறது.
கண்ணாடி மாளிகை பெங்களூரில் முக்கியமான சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோர், இப்பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை.
அரிய வகை மரங்கள், பழமையான மரங்கள், வண்ண மயமான பூக்கள் இங்குள்ளன. 30 ஏக்கரில் விசாலமான ஏரியும் உள்ளது. ஏரியின் நடுவே கூட்டம், கூட்டமாக பறக்கும் பறவைகளை காணலாம். பூங்காவின் இயற்கை அழகை ரசிக்கலாம். பூங்கா நடுவில் அழகான கண்ாடி மாளிகையும் உள்ளது.
நடப்பாண்டு கூகுள் வழியாக, மக்கள் அதிகம் தேடிய சுற்றுலா தலங்களில், இப்பூங்கா முதல் இடத்தில் உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பட்டியல் வெளியிட்டுள்ளது.
இது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும். பெங்களூருக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில், இப்பூங்காவும் ஒன்றாகும். இங்கு நடக்கும் மலர் கண்காட்சி மற்றும் மாம்பழ மேளா மிகவும் பிரபலம்.
எப்படி செல்வது?
பெங்களூரின் மெஜஸ்டிக்கில் இருந்து, ஏழு கி.மீ., தொலைவில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 38 கி.மீ., யஷ்வந்த்பூரில் இருந்து 13 கி.மீ., தொலைவில் லால்பாக் பூங்கா உள்ளது. நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், பூங்காவுக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயங்குகின்றன. வாடகை கார்கள், ஆட்டோ வசதியும் உள்ளது. மெட்ரோ ரயில் வசதியும் உள்ளது.
அனுமதி நேரம்: காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
தொடர்பு எண்கள்: 080 - 2657 1925, 080 - 2657 8184
அருகில் உள்ள இடங்கள்: திப்புவின் கோடை அரண்மனை, கே.ஆர்.மார்க்கெட், சுதந்திர பூங்கா.
- நமது நிருபர் -

