/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மதக மாசூரு நீர்வீழ்ச்சி
/
சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மதக மாசூரு நீர்வீழ்ச்சி
சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மதக மாசூரு நீர்வீழ்ச்சி
சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மதக மாசூரு நீர்வீழ்ச்சி
ADDED : அக் 30, 2025 04:42 AM

கர்நாடகாவின், பல்வேறு மாவட்டங்களில் சில மாதங்களாக, வழக்கத்தை விட, அதிகமான மழை பெய்தது. இப்போதும் பெய்கிறது. இதனால் நீர் வீழ்ச்சிகளின் அழகு அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கின்றன. இவற்றில் மதக மாசூரு நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும்.
மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சிகளை பார்ப்பது, தனி சுகம்தான். மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய நீர் வீழ்ச்சிகளில், மதக மாசூரு நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும். ஹாவேரி மாவட்டம், ரட்டிஹள்ளி தாலுகாவின், மதக மாசூரு கிராமத்தில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது.20 அடி உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சி, குமுதவதி ஆறாக பாய்கிறது.
இந்த நீர்வீழ்ச்சி, ஹாவேரி மாவட்டத்தில் இருந்தாலும், இதன் பிறப்பிடம் ஷிவமொக்கா மாவட்டமாகும். ஷிகாரிபுரா தாலுகாவின், அஞ்சனாத்ரி மலை அருகில், குமுதவதி ஆறு உதயமாகிறது. அங்கிருந்து பாய்ந்து வந்து ஏரியை நிரப்புகிறது. இந்த ஏரி நிரம்பி, நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. உள்ளூர் மக்கள், ஹாவேரி மாவட்ட ஜோக் நீர்வீழ்ச்சி என்றே அழைக்கின்றனர்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், நீர் வீழ்ச்சியை காண வருகின்றனர். சுற்றிலும் பசுமையான மலை, தோட்டம், வயல் வெளிகளுக்கு இடையே பாயும் நீர் வீழ்ச்சியை கண்டு ரசிக்கின்றனர். பால் நுரை போன்று பொங்கி வரும் நீரில் விளையாடி, போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்கின்றனர்.
பின்னணி கதை ஹாவேரியின், மதக மாசூரு ஏரி பின்னணியில், ஒரு கிராமிய கதை உள்ளது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியை மதக மாசூரு கிராமத்தின் கவுடா என்பவர், மக்களின் குடிநீர் தேவைக்காக உருவாக்க முடிவு செய்தார். எவ்வளவு ஆழமாக தோண்டியும் தண்ணீர் வரவில்லை.
என்ன செய்வது என, குழப்பத்தில் இருந்த போது, அவரது கனவில் தோன்றிய கடவுள், ஏரிக்கு உயிர் பலி கொடுத்தால் தண்ணீர் வரும் என, கூறினார். இதை கேட்ட கவுடா, தன் மருமகளையே பலி கொடுக்க முடிவு செய்தார்.
பலி கொடுக்க நாள் முடிவு செய்தார். அன்றைய தினம் ஏரிக்கு பூஜைகள் செய்தார். வேண்டுமென்றே செம்பை ஏரி வளாகத்தில் விட்டு விட்டு, கவுடா வீட்டுக்கு வந்தார். தன் இளைய மருமகள் கெஞ்சம்மாவை அழைத்து, செம்பை கொண்டு வரும்படி அனுப்பினார்.
மாமனாரின் உத்தரவுப்படி, ஏரிக்கு சென்ற மருமகள், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. கெஞ்சம்மாவை ஏரி தனக்குள் இழுத்து கொண்டதாம். அன்று முதல் ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரியை மதக மாசூரு கெஞ்சம்மா ஏரி என்றும் அழைக்கின்றனர்.
ஏரிக்கரையில் கெஞ்சம்மன் கோவில் அமைந்துள்ளது. பண்டிகைகள், சிறப்பு நாட்களில், மக்கள் இந்த கோவிலுக்கு வந்து பூஜை செய்கின்றனர். ஏரி அருகிலேயே வனத்துறை, 'சாலுமரத திம்மக்கா' பூங்கா அமைத்துள்ளது. அக்கம், பக்கத்தில் உள்ள மலை பிரதேசங்கள், இந்த பூங்கா சூழ்நிலையை பசுமை மயமாக்கியுள்ளது.
மொத்தம், 1,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள மதக மாசூரு ஏரி நீர், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்குகிறது. சுற்றுப்புற கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் மேம்பட்டுள்ளது. ஏரியில் இருந்து உதயமாகும் குமுதவதி ஆறு, சுற்றுலா பயணியரை மகிழ்வித்து, விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்கி, துங்கபத்ரா ஆற்றில் கலக்கிறது.
சுற்றுலா பயணி குமாரய்யா கூறுகையில், ''கெஞ்சம்மா ஏரி, கர்நாடகா முழுதும் பிரசித்தி பெற்றதாகும். ஏரியில் தண்ணீர் பெருக்கெடுத்து, குமுதவதி ஆறு உருவாகிறது. இந்த ஆறு ஹாவேரியின். ரட்டிஹள்ளி வழியாக ஹரிஹராவின், முதேனுர் வழியாக பாய்ந்து துங்கபத்ரா ஆற்றில் கலக்கிறது. என்னை போன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
''இந்த இடத்தில் உணவு, சிற்றுண்டி கடைகள் திறந்தால், உதவியாக இருக்கும். மதக மாசூரு ஏரி வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். மழைக்காலத்தில் இங்கு வந்தால், சொர்க்கத்துக்கு வந்ததை போன்ற உணர்வு ஏற்படுகிறது,'' என்றார்.
- நமது நிருபர் -

