ADDED : ஏப் 09, 2026 02:03 AM

- நமது நிருபர் -
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணைக்கு, மேல் பகுதியில் உள்ளது மாஞ்சோலை என்ற அழகிய கிராமம். அங்கு ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. எங்கு பார்த்தாலும் பச்சை பசலேன காட்சி அளிக்கும் மாஞ்சோலைக்கு, ஒரு முறை சென்றால் அங்கிருந்து திரும்ப வரவே மனம் இருக்காது. இதுபோல கர்நாடகாவின் மாஞ்சோலையாக உள்ள கிராமத்தை பற்றி பார்க்கலாம்.
ஹாசன் மாவட்டம், சக்லேஸ்பூர் தாலுகாவில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது காகினகெரே கிராமம். இங்கு இயற்கை அன்னையின் மடியில் தவழும் மலைகள், பச்சை, பசேலென கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கின்றன.
திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில், மஞ்சராபாத் கோட்டை கட்டபட்ட போது, அந்த கோட்டைக்கு கண்காணிப்பு கோபுரமாக இங்கு, ஒரு சிறிய கோட்டை கட்டப்பட்டு உள்ளது. இன்றும் அந்த கோட்டை உள்ளது.
பிசிலே வனப்பகுதி சாலையில் இருந்து செல்லும் போது, காகினகெரே கிராமத்திற்கு இடதுபக்கமாக பாதை செல்கிறது. ஆதிஹள்ளி, ஹிலுகல்லு, ஹொங்கடஹல்லு கிராமங்களை தாண்டி பயணம் செய்தால், இக்கிராமத்தை அடையலாம்.
பருவமழை பெய்யும் போதோ அல்லது பருவமழைக்கு முந்தைய காலத்திலோ இங்கு சென்று வருவது சிறப்பு. அங்கு நிலவும் பனிமூட்டமான சூழ்நிலையை அனுபவிக்கலாம். மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது, கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பசுமையை மட்டுமே பார்க்க முடியும்.
கார், பைக்கில் சென்றால் நினைத்த இடத்தில் நிறுத்தி, புகைப்படங்கள் எடுத்து மகிழலாம். குறுகிய சாலையில் வாகனத்தை ஓட்டி செல்வது புதிய அனுபவமாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் செல்கிறது. ஒரு நாள் முழுதும் பசுமையை அனுபவிக்க காகினகெரே ஏற்ற இடமாக உள்ளது.
எப்படி செல்வது?
1 பெங்களூரில் இருந்து காகினகெரே 260 கி.மீ., துாரம்.
2 சக்லேஸ்பூரில் இருந்து 42 கி.மீ., துாரம்.
3 மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சக்லேஸ்பூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் உள்ளது.
4 ரயிலில் சென்றால் சக்லேஸ்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்.
