தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/இயற்கை எழில் கொஞ்சும் கோபிநாதம்

இயற்கை எழில் கொஞ்சும் கோபிநாதம்

இயற்கை எழில் கொஞ்சும் கோபிநாதம்


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 07:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சாம்ராஜ்நகர் மாவட்டம், சுற்றுலா தலங்கள் நிறைந்துள்ள மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதிகள், பூலோக சொர்க்கமாக விளங்குகின்றன. இவற்றில் கோபிநாதமும் ஒன்றாகும்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவின் கர்நாடகா - தமிழகம் எல்லையில், கோபிநாதம் உள்ளது. இது, சந்தன கடத்தல் வீரப்பன் பிறந்த ஊராகும். கோபிநாதம் வரலாற்று பிரசித்தி பெற்ற வனப்பகுதியாகும்.

இந்த வனம் காவிரி வன விலங்குகள் சரணாலயம் எல்லையில் உள்ளது. வீரப்பன் உயிருடன் இருந்த போது, வெறும் வனப்பகுதியாக மட்டுமே இருந்த கோபிநாதம், அவர் இறந்த பின் சிறந்த சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

இங்கு குவிந்து கிடக்கும் இயற்கை அழகுக்கு, ஈடு இணையே இல்லை. இதை ரசிக்க தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். தமிழகத்தை ஒட்டி இருப்பதால், அம்மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் இங்கு வருவோர் எண்ணிக்கை அதிகம். வீரப்பனால் கொல்லப்பட்ட வனத்துறை அதிகாரி சீனிவாசின் நினைவிடமும் உள்ளது.

யானைகள், சிறுத்தை, மான், காட்டெருமை உட்பட, பல விதமான விலங்குகள், பறவைகளை காணலாம். டிரெக்கிங் செய்ய அனுமதி உள்ளது. சபாரி சென்று, வன விலங்குகள், வனத்தில் சுதந்திரமாக நடமாடுவதை ரசிக்கலாம். மாசற்ற துாய்மையான காற்றை சுவாசிக்கலாம்.

பரபரப்பான நகர வாழ்க்கையில், வெறுப்படைந்த மக்கள் அமைதியை தேடி, கோபிநாதம் வனப்பகுதிக்கு வருகின்றனர். மணிக்கணக்கில் பொழுது போக்குகின்றனர்.

இங்கு தங்குவதற்கு தரமான ரிசார்ட்டுகள், கர்நாடக வனத்துறைக்கு சொந்தமான ரிசார்ட்டுகள் உள்ளன. இதில் தங்கி இயற்கையை ரசிக்கலாம்.

எப்படி செல்வது?



பெங்களூரில் இருந்து, 140 கி.மீ., மைசூரில் இருந்து, 51 கி.மீ., மாண்டியாவில் இருந்து, 63 கி.மீ., கொள்ளேகாலில் இருந்து, 207 கி.மீ., சாம்ராஜ் நகரில் இருந்து, 41 கி.மீ., துாரத்தில் கொள்ளேகால் உள்ளது.

மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, கொள்ளேகாலுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. கொள்ளேகாலில் இறங்கி, இங்கிருந்து வாடகை வாகனங்களில், கோபிநாதம் வனப்பகுதிக்கு செல்லலாம்.

அனுமதி நேரம்: காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை. வனத்துறை அதிகாரிகளிடம் கட்டணம் செலுத்தி, அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: ஒகனேக்கல், கோபிநாதம் அணை, மலை மஹாதேஸ்வரா மலை, காவிரி வன விலங்குகள் சரணாலயம், சிவசமுத்ரா நீர்வீழ்ச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us