/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
பெட்டதபுரா மலை உச்சிக்கு சென்று இயற்கை அழகை ரசிக்கலாமா?
/
பெட்டதபுரா மலை உச்சிக்கு சென்று இயற்கை அழகை ரசிக்கலாமா?
பெட்டதபுரா மலை உச்சிக்கு சென்று இயற்கை அழகை ரசிக்கலாமா?
பெட்டதபுரா மலை உச்சிக்கு சென்று இயற்கை அழகை ரசிக்கலாமா?
ADDED : ஜூலை 10, 2025 03:37 AM

மைசூரு நகரில் இருந்து குடகின் மடிகேரிக்கு செல்லும் வழியில், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ளது பெட்டதபுரா என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தின் அடிவாரத்தில் இருந்து, 4,350 அடி உயரத்தில் உள்ளது பெட்டதபுரா மலை. மலை உச்சியில் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. மலை உச்சியில் கோவில் இருப்பதால், 'டிரெக்கிங்' செல்வோர் இதை சுற்றுலா தலமாகவே பயன்படுத்துகின்றனர்.
அடிவாரத்தில் இருந்து 3,500 படிக்கட்டுகளில் ஏறி, மலை உச்சிக்கு செல்ல வேண்டும். வெயிலில் இருந்து தப்பிக்க, காலை 5:00 மணிக்கே இங்கு சுற்றுலா பயணியர் வந்து டிரெக்கிங் செல்ல துவங்கி விடுகின்றனர்.
இல்லாவிட்டால் மாலை 3:00 மணிக்கு மேல் ஆரம்பிக்கின்றனர். மழை காலங்களில் மூடு பனியின் நடுவில் டிரெக்கிங் செல்வது, புதிய அனுபவமாக இருக்கும். படிக்கட்டுகள் சீரான முறையில் இருப்பதால் ஏறி செல்வதில் எந்த பிரச்னையும் இல்லை.
மலை உச்சிக்கு செல்லும் போது, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், பழங்கால மண்டபங்களை பார்க்கும் வாய்ப்பும் உண்டு.
இதுதவிர அரிய வகையை சேர்ந்த புல்புல், ராபின், பாப்லர் உள்ளிட்ட பறவைகளை கண்டு ரசிக்கலாம். ஊதா, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் காட்டு மலர்கள் படிக்கட்டு ஓரமாக பூத்துக் குலுங்கும்.
பூக்களின் வாசங்களுடன் படியேறி செல்வது, புதிய அனுபவத்தை தரும். மலை உச்சியில் பாறைகளுக்கு நடுவில், எப்போதும் தண்ணீர் வற்றாத சிறிய குளம் உள்ளது.
மலை உச்சியில் உள்ள பாறையின் மீது நின்று பார்த்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறிய கிராமங்கள், பரந்த விவசாய நிலங்கள், தொலைதுார நீள மலைகள், மனதை கொள்ளை கொள்ளும்.
பெட்டதபுரா மலைக்கு பின்பக்கமாகவும் ஒரு வழி உள்ளது. அந்த வழியாக மலையில் இருந்து இறங்கினால் கூடுதல் நேரம் ஆகும்.
இதனால், செல்லும் வழியிலேயே திரும்ப வந்து விடுவது நல்லது. மலைக்கு செல்லும் வழியில் ஹோட்டல்கள், கடைகள் எதுவும் இல்லாததால் உணவு, குடிநீர் எடுத்து செல்வது நல்லது.
பெங்களூரில் இருந்து பெட்டதபுரா 213 கி.மீ., துாரத்தில் உள்ளது. சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து, மடிகேரி செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் சென்றால், பெட்டதபுராவுக்கு செல்லலாம்.
ரயிலில் சென்றால் மைசூரு கிருஷ்ணராஜா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து செல்ல வேண்டும்.
- -நமது நிருபர்--