ADDED : ஜூலை 15, 2026 11:43 PM

- நமது நிருபர் -
கர்நாடகாவில் ஆன்மிகம் மற்றும் கடற்கரைக்கு பெயர் பெற்ற, உத்தர கன்னடாவின் கோகர்ணாவில் அமைந்துள்ளது, குட்லே பீச். அமைதி மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக உள்ளது. 'கிரசன்ட்' எனும் பிறை வடிவில் அமைந்துள்ள இந்த பீச், பாறைகளால் சூழப்பட்டுள்ளது.
மூன்று கடற்கரைகளின் இணைப்பாகவும் குட்லே பீச் உள்ளது. இங்கிருந்து துவங்கி பாறைகள் வழியாக நடந்தே சென்று, ஓம், ஹால்ப் மூன், பாரடைஸ் பீச்களை அடையலாம்.
பாறைகளில் இருந்து பார்க்கும் போது, அரபிக்கடலின் அழகு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
நீர் சாகச விளையாட்டுகளுக்கு ம் ஏற்ற இடமாக குட்லே பீச் உள்ளது. இங்கு சர்பிங் செய்ய கற்று கொள்ள பயிற்சி அளிக்கின்றனர்.
பனானா போட் ரைடு, ஜெட் ஸ்கீ என்று சாகச விரும்பிகளுக்கான அதிவேக நீர்விளையாட்டுகளும் உள்ளன.
யோகாசன ஆர்வலர்களின் புகலிடமாக உள்ள இங்கு, அதிகாலையில் கடற்கரையின் அமைதியான சூழலில், சுற்றுலா பயணியர் யோகா செய்கின்றனர்.
மாலை நேரத்தில் கடற்கரை பகுதியில் உள்ள கடைகளில் உள்ளூர்மக்களின் தயாரிப்பான கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பீச் பகுதியில் உள்ள உணவு கூடாரங்களில் அமர்ந்தபடி சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பீச்சை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மூங்கில் குடில்கள் உள்ளன. பட்ஜெட்டிற்கு ஏற்ப ஹோம்ஸ்டேக்கள், ரிசார்ட்டுகள் உள்ளிட்ட வசதியும் உள்ளன.
இந்திய, கொங்கனி, இத்தாலிய, இஸ்ரேலிய உணவு வகைகள் கிடைக்கின்றன.
மீன் வறுவல், இறால் கறி, சீக்கன் கீ ரோஸ்ட் போன்ற பாரம்பரிய உணவுகளும் கிடைக்கின்றன.
இத்தகைய வசதிகளை கொண்ட பீச்சிற்கு, ஒரு நாள் குடும்பத்தினருடன் சென்று வரலாமே!
