/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
வெயிலில் இருந்து தப்பிக்க குளுகுளு தொட்டமாகளி
/
வெயிலில் இருந்து தப்பிக்க குளுகுளு தொட்டமாகளி
ADDED : ஏப் 03, 2025 07:19 AM

'குளுகுளு' நகரம் என்று பெயர் பெற்ற பெங்களூரில் கூட, கடந்த சில தினங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க எங்காவது ஆறுகள், அருவிகள் இருக்கும் பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வரலாம் என்று மக்கள் நினைப்பது உண்டு.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் விடப்பட்டு இருப்பதால், பிள்ளைகளுடன் எங்காவது சுற்றுலா செல்லலாம் என்று பெற்றோர் நினைத்து கொண்டு இருப்பர். வெயிலில் இருந்து தப்பிக்கும் குளுகுளு இடமாக தொட்டமாகளி உள்ளது.
மாண்டியாவின் மலவள்ளியில் காவிரி ஆற்றின் படுகையில் பீமேஸ்வரி என்ற புகழ்பெற்ற சுற்றுலா தலம் உள்ளது. இங்கிருந்து 6 கி.மீ., துாரம் பயணித்தால் தொட்டமாகளியை சென்றடையலாம். இந்த இடமும் காவிரி ஆற்றின் கரையில் தான் அமைந்து உள்ளது.
பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், வார இறுதி நாட்களில் இங்கு அதிகம் வருகின்றனர். ஆற்றின் கரையோரம் சிறிய கூடாரம் அமைத்து தங்குகின்றனர். ஆற்றின் கரையில் இருந்து எதிர்திசையில் பார்க்கும் போது பச்சை, பசலேன மலை காட்சி அளிக்கிறது. இது மனதிற்கு ஒருவித அமைதியை தருகிறது.
ஆற்றின் எதிர்திசையில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வரும். வாய்ப்பு இருந்தால் நேரில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இங்கு ஆற்றின் ஆழம் குறைவாக இருக்கும் என்பதால் உற்சாக குளியல் போடலாம். துாண்டில்களை எடுத்து சென்று மீன் பிடித்து மகிழலாம். நீர் சார்ந்த விளையாட்டுகள் விளையாட ஏற்ற இடமாக உள்ளது.
ஆற்றின் கரையில் இருந்து சிறிது துாரம் நடந்து சென்றால், பழங்கால சிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலின் அருகே சோலிகா பழங்குடியின சமூக மக்கள் வசிக்கின்றனர். அவர்களை பார்க்கவும், வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். நகர வாழ்க்கையில் இருந்து ஒரு நாள் விடுபட்டு குடும்பத்தினருடன் நேரத்தை போக்கவும், தற்போது அடிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்கவும் ஏற்ற இடமாக உள்ளது.
பெங்களூரில் இருந்து தொட்டமாகளி 132 கி.மீ., துாரத்தில் உள்ளது. மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து மலவள்ளிக்கு அடிக்கடி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் சென்றால் மத்துார் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். காரில் செல்பவர்கள் மைசூரு செல்லும் பத்து வழி சாலையில் சென்று மலவள்ளியில் இருந்து செல்லலாம். மாற்று பாதையாக கனகபுரா வழியாகவும் செல்லலாம்.
- நமது நிருபர் -

