என்னை நம்பி ஓட்டளியுங்கள் உங்களில் ஒருவராக இருப்பேன்: பென்ஜமின்
என்னை நம்பி ஓட்டளியுங்கள் உங்களில் ஒருவராக இருப்பேன்: பென்ஜமின்
ADDED : ஏப் 18, 2026 05:09 PM

மதுரவாயல்: மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் பென்ஜமின் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
கடந்த முறை நழுவவிட்ட வெற்றியை இம்முறை 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம், ராமாபுரம் 154வது வார்டில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பகுதி செயலர் சத்யநாதன், வட்ட செயலர்கள் வெல்டிங் வேலு, வேணுகோபால், கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பென்ஜமின் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா கலாசாரம் பரவியுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், முதல்வர் பழனிசாமி மேற்பார்வையில், கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள், சிறுமியர், முதியோரை பாதுகாக்க தி.மு.க., அரசு தவறிவிட்டது. பாலியல் வன்கொடுமையால் பெண்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பெண்கள் மீதான குற்றங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த ஒரே அரசு, 'அம்மா' அரசு மட்டுமே.
தி.மு.க., ஆட்சிக்கு எதிராக போராடாத துறையே கிடையாது. இந்த அரசு மக்களுக்கானது என்றால், மக்கள் கோரிக்கையை ஏற்க வேண்டுமே. ஆனால், துாய்மை பணியாளர்களில் இருந்து தலைமை செயலக அதிகாரிகள் வரை, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது, தி.மு.க., அரசின் நிர்வாக திறன் இல்லாத அரசு என்பதை எடுத்துக் காட்டுகிறது. சொத்து வரி, வீட்டு வரி உயர்த்தியது, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்தது தான், தி.மு.க., அரசின் சாதனை.
அமைச்சராக இருந்தபோது, ராமாபுரத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தினேன்; 19 குளங்களை சீரமைத்துள்ளேன். அதனால், என்னை நம்பி ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள். உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
