தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/டெக்னாலஜி/ஸ்டார்ட்அப்கள்/சாமானியப் பெண்கள்... அசாதாரணச் சாதனைகள்!

சாமானியப் பெண்கள்... அசாதாரணச் சாதனைகள்!

சாமானியப் பெண்கள்... அசாதாரணச் சாதனைகள்!


ADDED : நவ 14, 2026 03:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 03:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– எல்.உமாசங்கர் –

உலகத்தை மாற்றியவர்கள் அனைவரும் உலகத்தை மாற்ற வேண்டும் என்ற கனவுடன் புறப்பட்டனர் என்று சொல்ல முடியாது. சிலர் தங்கள் குடும்பத்தின் கடனைத் தீர்க்க நினைத்தனர்; இன்னும் சிலரோ, சொந்த ஊரின் துயரத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் களமிறங்கினர்; பிறரோ, யாரும் கவனிக்காத ஒரு சிறிய வாய்ப்பைக் கண்டு அதைப் பற்றிக்கொண்டனர். இத்தகைய சின்னஞ்சிறு முயற்சிகள்தான் ஒரு கட்டத்தில் பலரது வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தின.

ஊறுகாய் மூலம்...

கேரளாவின், திருவனந்தபுரம் மாவட்டம், ஆரியநாட்டைச் சேர்ந்த பிந்துலேகா, ஆடைத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். கொரோனா பெருந்தொற்று தொழிலை முடக்கியபோது, கடன்கள் சேர்ந்து அன்றாடக் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதே சிரமமானது. ஆனால், முயற்சியைக் கைவிட அவர் தயாராக இல்லை.

சுய உதவிக் குழுவிடமிருந்து ரூ.50,000 கடன் பெற்று வீட்டுத் திண்ணையில் ஊறுகாய் தயாரிக்கத் தொடங்கினார். பின்னர் தேநீர் மசாலா, இஞ்சி பொடி, சட்னிப் பொடி, சாம்பார் மசாலா, முளைகட்டிய ராகி எனத் தயாரிப்புகளை விரிவுபடுத்தினார். அவருடன் மேலும் மூன்று பெண்கள் இணைந்தனர்.

இன்று ‘ஸ்ரீ கிருஷ்ணா பிக்கிள்ஸ் அண்ட் புட் புராடக்ட்ஸ்’ என்ற அந்த முயற்சி, 2026 தேசிய சரஸ் மேளாவில் சிறந்த இயற்கை உணவுக் கடைக்கான இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளது.

ஒரு காலத்தில் கடன்களால் துவண்டிருந்த பெண், இன்று மற்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குகிறார்.

சோப்பு... சிறப்பு

உத்தராகண்ட்டின் தெஹ்ரி கர்வால் பகுதியைச் சேர்ந்த மிரா குல்கர்னி, இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். 28-வது வயதில் கணவரைப் பிரிந்தார். பெற்றோரையும் இழந்தார். துணை என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில், மன அமைதிக்காக மெழுகுவர்த்திகளையும், கைகளால் செய்யும் சோப்புகளையும் செய்யத் தொடங்கினார். மகளுக்குத் திருமணம் முடிந்த பிறகு, 45-வது வயதில் அந்த ஆர்வத்தையே தொழிலாக மாற்றினார். 2000-ம் ஆண்டில், ரூ.2 லட்சம் முதலீட்டுடன், இரண்டு ஊழியர்களுடன், ஒரு கார் நிறுத்துமிடத்தில் ‘பாரஸ்ட் எஸன்ஸியல்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார். ஆயுர்வேத அடிப்படையில், கைகளால் செய்யப்பட்ட சோப்புகள், தோல் பராமரிப்புப் பொருட்கள் எனத் தயாரிப்புகள் உருவாகின. தொழில் நடத்திய அனுபவம் இல்லை. ஆனால், தரத்தில் சமரசம் செய்யவில்லை. இன்று அந்தச் சிறிய முயற்சி, இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஆயுர்வேத அழகுப் பொருட்கள் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

விதை இயக்கம்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டம், தீர்த்தா கிராமத்தைச் சேர்ந்த பீபிஜான் மவுலாசாப் ஹலேமானிக்கு விதைகளைப் பாதுகாப்பது புதிய விஷயமல்ல. அவரது தந்தை பாரம்பரிய விதைகளைச் சேமித்துப் பாதுகாத்து வந்தவர். அந்தப் பழக்கம் மகளுக்கும் தொற்றிக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் பல பாரம்பரிய விதைகள் விவசாய நிலங்களிலிருந்து மறையத் தொடங்கின. அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 2018-ல் தன்னுடன் 14 பெண்களை இணைத்துக் கொண்டார்.

அப்போது உருவான பீபி பாத்திமா பெண்கள் சுய உதவிக் குழு, விதைகளைச் சேகரித்துப் பாதுகாத்து மீண்டும் விவசாயிகளிடம் கொண்டு சென்றது. சிறுதானியங்கள் உள்ளிட்ட பாரம்பரியப் பயிர்களின் கலப்புச் சாகுபடியையும் ஊக்குவித்தது. ஒரு கிராமத்தில் தொடங்கிய முயற்சி, மழை சார்ந்த விவசாயம் நடைபெறும் 30 கிராமங்களுக்குப் பரவி, நுாற்றுக்கணக்கான பாரம்பரிய விதை வகைகளைப் பாதுகாக்கும் அளவுக்கு வளர்ந்தது. இதற்காக மத்திய அரசின் தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வழங்கும் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. இது தனக்காகத் தொடங்கிய முயற்சி அல்ல; அடுத்த தலைமுறைக்காகத் தொடங்கிய முயற்சி.

பால் கனவு

ஹிமாச்சல பிரதேசத்தின் ஜங்லா கிராமத்தைச் சேர்ந்த கவிதா ஷர்மா, 2025 அக்டோபரில் நாளொன்றுக்கு வெறும் 20 லிட்டர் பால் உற்பத்தியுடன், பால் பதப்படுத்தும் நிலையத்தைத் தொடங்கினார். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் உதவி கிடைத்ததும், நவீன இயந்திரங்கள் வந்தன. நெய், பாலாடைக்கட்டி, தயிர், வெண்ணெய் எனத் தயாரிப்புகள் பெருகின. இன்று அந்தச் சிறிய பால் பண்ணை, ஆண்டுக்கு ரூ.70 லட்சம் வருமானம் தரும் தொழிலாக வளர்ந்துள்ளது. அந்த வளர்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர்களது பால் உற்பத்தியை விற்பனை செய்வதற்கான நிலையான சந்தை கிடைத்துள்ளது. ஆம். அவரது பால் பண்ணையில் உருவானது வெறும் வருமானம் அல்ல; கிராமத்தின் புதிய எதிர்காலம்.

லாபம் அல்ல...

ஜார்க்கண்டின், கும்லா மாவட்டம், போராங் கிராமத்தைச் சேர்ந்த பூல் குமாரியின் குடும்பத்தின் வருமானம் சொற்பமாகத்தான் இருந்தது. 2018-ல் கோழி வளர்ப்பைத் தொடங்கினார். கிருஷி விஞ்ஞான கேந்திரா அளித்த பயிற்சியும் தொழில்நுட்ப வழிகாட்டுதலும் அவருக்குத் துணை நின்றன. வளர்ந்த பறவைகள், குஞ்சுகள், முட்டைகள் என மூன்று வழிகளிலும் வருமானம் பெருகியது. 2025-–26ல் அவரது கோழிப் பண்ணை ரூ.4,48,400 மொத்த வருமானத்தைத் தந்தது. செலவுகள் போக, கையில் மிஞ்சிய நிகர வருமானம் ரூ.2,23,400. ஆனால், இந்தக் கதையின் உண்மையான லாபம் பணம் அல்ல; அவரைப் பார்த்து 30 பழங்குடிப் பெண்கள் கோழி வளர்ப்பில் இறங்கியதுதான்.

சிக்கலற்ற நுாடுல்ஸ்

பீஹாரின் சேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமாரும் ரஞ்சனா குமாரியும் வீட்டிலிருந்து தொடங்கிய சிறிய முயற்சியை, மத்திய அரசின் திட்ட உதவியுடன் நுாடுல்ஸ் தயாரிப்புத் தொழிலாக மாற்றியுள்ளனர். ‘ஸ்மிருதி நுாடுல்ஸ்’ என்ற அந்த நிறுவனம் இன்று 10 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குகிறது. நளந்தா, நவாதா உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் அதன் தயாரிப்புகள் செல்கின்றன. ஒரு குடும்பத்தின் சமையலறைச் சிரமம், இன்று பத்துக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாறியிருக்கிறது.

துாய காற்று

இந்த நிஜக்கதையில் வருமானம் இல்லை. விற்பனை இல்லை. தொழில் இல்லை. இருந்தது வகுப்பறையும், அதில் மூச்சுத் திணறிய குழந்தைகளும், அவர்களுக்காகச் சிந்தித்த இரண்டு மாணவர்களும் மட்டுமே.

டில்லியில் குளிர்காலம் வந்தால், காற்று கனமாகிவிடும். வகுப்பறைகளுக்குள் நுண்ணிய துாசுத் துகள்கள் நுழைந்துவிடும். விலை உயர்ந்த காற்று சுத்திகரிப்புக் கருவிகள் எல்லாப் பள்ளிகளுக்கும் எட்டாது. இந்த இடைவெளியைத்தான் சம்ஸ்கிருதி பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த கிருஷ் அகர்வாலும், வசந்த் வேலி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்த சமர்த் மீட்டிலும் கண்டனர். அவர்கள் கேட்ட கேள்வி எளிமையானது. ஏற்கனவே வகுப்பறையில் சுழலும் மின்விசிறியையே காற்று சுத்திகரிப்புக் கருவியாக மாற்ற முடியாதா?

அந்தக் கேள்வியிலிருந்து பிறந்ததுதான் பிராஜக்ட் வாயு. இதன் வடிகட்டி, சாதாரண மேஜை மின்விசிறி, சுவர் மின்விசிறி ஆகியவற்றில் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மின்னுாட்டம் பெற்ற வடிகட்டிப் பொருள், காற்றில் கலந்திருக்கும் நுண்ணிய துாசுத் துகள்களை, குறிப்பாக நுரையீரலுக்குள் ஊடுருவக்கூடிய மிக நுண்ணிய மாசுத் துகள்களை, மின்னியல் ஈர்ப்பு மூலம் பிடித்துக் கொள்கிறது. ஒரு வடிகட்டியைத் தயாரிக்க ஆகும் செலவு ரூ.140 மட்டுமே. அதில் வடிகட்டி, மீள்தன்மை கொண்ட விளிம்பு, தையல், எடுத்துச் செல்லும் செலவு ஆகியவை அடங்கும். வடிகட்டியை மாதம் ஒருமுறை மாற்ற வேண்டும்.

இந்த முயற்சியின் சிறப்பு, அதன் நோக்கத்தில் இருக்கிறது. வடிகட்டிகள் டில்லியில் உள்ள வசதி குறைந்த பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்தப் பணிக்காக கிருஷ் அகர்வால் இந்த ஆண்டின் டயானா விருதைப் பெற்றுள்ளார். சமர்த் மீட்டில் இந்தத் திட்டத்தின் இணை நிறுவனராகச் செயல்பட்டுள்ளார். சமூகத்துக்கு நன்மை செய்யும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் உலக அளவிலான அங்கீகாரமாக இந்த விருது கருதப்படுகிறது.

எல்லா வெற்றிகளும் பணத்தில் அளக்கப்படுவதில்லை. சில வெற்றிகள், ஒரு குழந்தை சிரமமின்றிச் சுவாசிக்கும் ஆக்சிஜன் மூலம் அளக்கப்படுகின்றன. பெரிய தொழில்நுட்பம் இல்லாமல், பெரிய நிதி இல்லாமல், இருக்கும் பொருளைப் புதிய நோக்கத்துக்குப் பயன்படுத்தியதுதான் இங்கே புதுமை. பள்ளிச் சீருடையில் இருந்த இரண்டு மாணவர்கள், பல ஆயிரம் குழந்தைகளின் நுரையீரலுக்குக் காவலாக நின்றிருக்கிறார்கள். அதுதான் இந்தக் கதையின் உண்மையான கணக்கு.

வித்தியாசம் என்ன?

நாளை நீங்கள் தொடங்கும் முயற்சி உலக அளவில் பேசப்பட வேண்டியதில்லை. ஒரு குடும்பத்துக்கு வருமானம் தந்தால் போதும். ஒரு பெண்ணுக்குச் சுயமரியாதை தந்தால் போதும். ஒரு குழந்தை நிம்மதியாக மூச்சு விட்டால் போதும். அதுவே பெரிய வெற்றிதான். வரலாற்றைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும், வரலாற்றை உருவாக்குபவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் இதுதான்: ஒருவர் நடந்தவற்றைப் பார்ப்பார்; இன்னொருவர் நடக்க வேண்டியவற்றை உருவாக்குவார்!

அடுத்த அடிக்கான ஆதாரம்

நாளை காலையில் எழுந்ததும் ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில், தெருவில், பள்ளியில், அலுவலகத்தில் தினமும் கண்ணில் படும் ஒரு சிரமத்தை மட்டும் எழுதுங்கள். அந்தச் சிரமத்தைத் தீர்க்க ஏற்கனவே உங்களிடம் இருக்கும் ஒரு பொருள், ஒரு திறமை, ஒரு நண்பர் யார் என்று அதன் அருகிலேயே குறித்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாரம் மட்டும் அந்த ஒரு சிரமத்துக்காகச் செலவிடுங்கள். ஒரு நபருக்கு மட்டும் உதவிப் பாருங்கள். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று தொடங்காதீர்கள். ஒரு ஊர், ஒரு பள்ளி, ஒரு குடும்பம் என்று எல்லை குறுகக் குறுக, விளைவு ஆழமாகும். ஒரு வாரத்தின் முடிவில், அந்த ஒரு நபரின் மாற்றத்தை எழுதுங்கள். அந்த ஒரு பக்கக் குறிப்புதான் உங்கள் அடுத்த அடிக்கான ஆதாரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us