/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
மெக்காலே கல்விமுறை; சில உண்மைகள்..!
/
மெக்காலே கல்விமுறை; சில உண்மைகள்..!
UPDATED : மார் 30, 2023 07:18 PM
ADDED : மார் 30, 2023 05:29 PM

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலவழி உயர்கல்வியை இந்தியாவில் கட்டாயமாக்கி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய வைத்தவர் தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே (1800-1859). 1830 ஆம் ஆண்டு பிரிட்டனின் 'ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்' எனப்படும் கீழவையில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் மெக்காலே. நான்கு ஆண்டுகள் இந்தியாவின் நான்கு திசைகளுக்கும் பயணித்து இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்துகொண்டார்.
1835 ஆம் ஆண்டு சமஸ்கிருதம், அரபி என பல மொழிகளில் இந்திய துணை கண்டத்தில் கல்வி பயிற்றுவிக்கப்பட்ட நிலையில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ கல்வி மொழியாக மாற்றியவர் மெக்காலே. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலமான ரெனைசன்ஸ் கால கல்விமுறையை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த காலத்திலேயே ஐரோப்பாவில் கலை, அறிவியல், இசை, சிற்பக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட துறைகள் வளர்ந்தன. இவற்றைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார் மெக்காலே.
![]() |
தற்போது நமது பள்ளிகளில் உள்ள மாணவர்களின் வயதுக்கேற்ப வகுப்புகள், அதற்கேற்ற பாடத்திட்டம், மாணவர்களின் மதிப்பெண் முறை, பொதுத்தேர்வு, தேர்ச்சி, கோடை விடுமுறை என அனைத்துமே மெக்காலே வடிவமைத்த கல்வி முறையே. பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு வித்திட்டவர் மெக்காலே. இந்தியர்களுக்கு அறிவியல், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல் நிறைந்த கல்வி உருவாக மெக்காலே கல்வி முறை அடிக்கல் நாட்டியது. இதில் என்ன தவறு என நினைக்கலாம். ஆனால், மெக்காலே பிரிட்டனின் காலனி நாடுகளின் கல்வியில் தங்களது காலனி அரசியலைப் புகுத்தினார் என்பது பலர் அறியாத உண்மை.
'ஒரு நல்ல ஐரோப்பிய நூலகத்தின் ஒரு ஷெல்ஃபில் உள்ள நூல்கள், அரேபிய, இந்திய மாணவர்களின் கல்வி அறிவுக்குப் போதுமானது. இந்தியாவின் மொத்த கல்வி அறிவே இந்த ஷெல்ஃபில் அடங்கிவிடும்' என்று ஏளனம் செய்தார் மெக்காலே. அந்த அளவுக்கு இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளை தரக்குறைவாக எடைபோட்டது பிரிட்டிஷ் அரசு. இந்தியர்களுக்கு கல்வி புகட்டலாம். ஆனால் ஓர் அளவுக்குமேல் புகட்டிவிட்டால் அவர்கள் நம்மை மிஞ்சிவிடுவர். எனவே அலுவலகத்தில் எழுத்தர் பணி செய்யத் தேவையான கல்வி அறிவு புகட்டி அவர்களை நமது அரசு அலுவலகங்களில் பணியாளர்களாக நியமிக்கலாம். இதனால் அவர்கள் நமக்காக வேலை செய்வர் என்றார் மெக்காலே.
ஆனால், 19 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னர் இந்திய பாடத்திட்டங்கள் உலகத்தரத்துக்கு மேம்பட்டுவிட்டது வேறு விஷயம். ஆனால் மெக்காலேவின் இந்த இந்தியர்கள் மீதான அடிமை மனப்பான்மை பல்வேறு தரப்பினரால் காலாகாலமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தது. இன்றுகூட மெக்காலே கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் இருப்பதை மறுப்பதற்கில்லை.


