/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
'ண' , 'ன', 'ந' எங்கெல்லாம் வரும்..? தமிழ் வளர்ப்போம்...! (1)
/
'ண' , 'ன', 'ந' எங்கெல்லாம் வரும்..? தமிழ் வளர்ப்போம்...! (1)
'ண' , 'ன', 'ந' எங்கெல்லாம் வரும்..? தமிழ் வளர்ப்போம்...! (1)
'ண' , 'ன', 'ந' எங்கெல்லாம் வரும்..? தமிழ் வளர்ப்போம்...! (1)
UPDATED : ஆக 11, 2022 04:50 PM
ADDED : ஆக 11, 2022 03:12 PM

தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் படிக்கும் பலரும் ஆங்கில மொழிக்கே முன்னுரிமை தருகின்றனர். இதனால், பலருக்கும் தமிழ் மொழி என்றாலே தகராறுதான். குறிப்பாக மூன்று சுழி எங்கு வரும்? ரெண்டு சுழியை எங்கு போடுவது என குழப்பமடைவர். புரிந்து கொண்டால் வீண் குழப்பத்தை தவிர்க்கலாம். எனவே, 'ண', 'ன' மற்றும் 'ந' எங்கெல்லாம் வரும் என்று பார்க்கலாம்.
மூன்று சுழி 'ண',
இரண்டு சுழி 'ன'
மற்றும் 'ந'
இவற்றில் என்ன வித்தியாசம்?
தமிழ் எழுத்துக்களில் இரண்டு சுழி 'ன' என்பதும், மூன்று சுழி 'ண' என்பதெல்லாம் பிறர் எளிதாக புரிந்து கொள்வதற்காக வெறும் பேச்சு வழக்கில் மட்டுமே கூறப்படுகின்றன. இவற்றை மெய்யெழுத்துக்களின் வரிசையில் 'ண்' க்கு முன்பு 'ட்' உள்ளதால் டண்ணகரம் எனக் குறிப்பிட வேண்டும். அதேப்போல் தான் பிற 'ன' மற்றும் 'ந' என்பதற்கும் முன்னால் உள்ள மெய்யெழுத்தை கொண்டு வருகிறது.
அதாவது...
![]() |
'ண' இதன் பெயர் டண்ணகரம்,
'ன' இதன் பெயர் றன்னகரம்,
'ந' இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.
இதை எப்படி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனப் பார்க்கலாம். 'இரண்டில் மூன்றும், மூன்றில் இரண்டும், வந்தது' என்ற வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளலாம். இதில்... இரண்டு என்ற வார்த்தையில் மூன்று சுழி 'ண்' வருகிறது தொடர்ந்து டண்ணகரம் வருகிறது. மூன்று என்ற வார்த்தையில் 'ன்' வருகிறது. தொடர்ந்து றன்னகரம் வருகிறது. வந்தது என்பதில் தந்நகரம் வருகிறது.
இரண்டு - டண்ணகரம்
மூன்று - றன்னகரம்
வந்தது - தந்நகரம்
இந்த வாய்ப்பாட்டை நினைவில் வைத்துக் கொண்டால் போதுமானது. சந்தேகம் எழும் போது சொல்லிப்பார்த்து பிழையின்றி குறிப்பிடலாம்.
ண் - ட
உதாரணமாக மண்டபம், நண்டு, திண்டாட்டம், கண்டு, வண்டி, உண்டியல், கொண்டாள் - என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி 'ணகர' ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு 'டண்ணகரம்' என்று பெயர்.
ன் - ற
சென்றான், கொன்றான், கன்று, இன்று, மூன்று, நன்றி - என எங்கெல்லாம் இந்த இரண்டு சுழி 'னகர' ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரக்கூடிய உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு 'றன்னகரம்' என்று பெயர்.
உங்களுக்கு ஏதாவது வார்த்தைகளில் சந்தேகம் ஏற்பட்டால் ஒருமுறை சொல்லிப்பார்க்கலாம். உதாரணமாக தண்டமா? தன்டமா? என்று வார்த்தைகளில் ஏதாவது சந்தேகம் வந்தால்... உடனடியாக அருகில் 'ட' உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்போது அங்கு மூன்று சுழி 'ண்' தான் வரும். ஏனென்றால் அது 'டண்ணகரம்'.
நன்றாக? நண்றாக? என்பதில் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் 'ற' உள்ளதா என பார்க்கவேண்டும். அப்போது ரெண்டு சுழி 'ன்' தான் வரும். ஏனெனில் அது 'றன்னகரம்' என்று புரிந்து கொள்ளலாம்.
ந் - த
இதேபோல்தான் 'ந' கரம் என்பது, 'தந்நகரம்' என்று குறிப்பிடப்படுகிறது. இந்த 'ந்' என்ற எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. ( ( உதாரணமாக காந்தி, பந்தி, சாந்து, நந்தி, சந்திரன், வெந்தயம், வந்து போன்ற வார்த்தைகள் )
இந்த 'ண' , 'ன' மற்றும் 'ந' விளக்கம் மாணவர்களுக்கு பிழையின்றி எழுதிப் படிக்க பயனுள்ளதாக இருக்கக்கூடும். தமிழ் வளர்ப்போம்...!