/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
ஆத்திச்சூடியும்.. புதிய ஆத்திச்சூடியும்: தமிழ் வளர்ப்போம்...!
/
ஆத்திச்சூடியும்.. புதிய ஆத்திச்சூடியும்: தமிழ் வளர்ப்போம்...!
ஆத்திச்சூடியும்.. புதிய ஆத்திச்சூடியும்: தமிழ் வளர்ப்போம்...!
ஆத்திச்சூடியும்.. புதிய ஆத்திச்சூடியும்: தமிழ் வளர்ப்போம்...!
UPDATED : செப் 07, 2022 01:09 PM
ADDED : செப் 07, 2022 12:14 PM

அவ்வையாரைப் பற்றி அறியாதவர்களே இல்லை எனலாம். அவ்வைப் பாட்டி என்றாலே போதும், குழந்தைகள் துள்ளிக் குதித்தெழுந்து சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக் கேட்ட பாட்டி தானே? என பதிலளிப்பர். ஒருசிலரோ 'அறம் செய்ய விரும்பு' என்ற ஆத்திச்சூடி பாடலை பாடுவர். மழலையர் வகுப்பில் உயிர் எழுத்துக்களை அறிமுகம் செய்யும் போதே, இவரின் ஆத்திச்சூடி குழந்தைகளிடம் புகுத்தப்படுகிறது.
![]() |
மொத்தம் 109 ஒரு வரிப்பாடல்கள் இந்த ஆத்திச்சூடியில் உள்ளன. பாடலின் துவக்க வரியால் இப்பெயரில் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில், அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என உயிர் வருக்கத்தில் வரக்கூடிய பாடல் வரிகளே பலருக்கும் நினைவுக்கு உள்ளது. இதேபோல் உயிர்மெய் வருக்கம், ககர வர்க்கம், சகர, தகர, நகர, பகர, மகர மற்றும் வகர வருக்கங்களில் பாடல்கள் அமைந்துள்ளன.
அதில், உத்தமனாய் இரு, மனம் தடுமாறேல், நோய்க்கு இடம் கொடேல், நேர்பட ஒழுகு, சோம்பித் திரியேல், சேரிடம் அறிந்து சேர், செய்வன திருந்தச் செய், நன்றி மறவேல், இளமையில் கல், பருவத்தே பயிர் செய் உட்பட பல்வேறு பாடல் வரிகள் இன்றும் பேச்சு வழக்கில் கருத்தை கூறவும், சுட்டிக்காட்டவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
முண்டாசுக்கவிஞரின் புதிய ஆத்திச்சூடி
பாரதி என்றாலே அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே... என்ற பாடல் வரிகள் நம்மையும் அறியாமல் பலருக்கும் நினைவுக்கு வரும். அன்பு, மொழிப்பற்று, விடுதலை வேட்கை, கோபம், கடவுள், பெண் விடுதலை என அவர் எழுதாத பாடல்களே இல்லை எனலாம்.
![]() |
அவ்வையாரின் ஆத்திச்சூடி போன்றே பாரதியாரும் ஒழுக்க நெறிகளை கற்பிக்கும் வகையில் புதிய ஆத்திச்சூடி எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. 110 ஒரு வரிப்பாடல்கள் உள்ள இந்த புதிய ஆத்திச்சூடியில், வாழ்வியல், ஆளுமை, புரட்சி மற்றும் சுயமரியாதை உட்பட பல்வேறு கருத்துகளில் நீதிநெறி அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அச்சம் தவிர், கொடுமையை எதிர்த்து நில், சாவதற்கு அஞ்சேல், சீறுவோர்க்கு சீறு, நையப்புடை, ரவுத்திரம் பழகு, குன்றென நிமிர்ந்து நில், சூரரைப் போற்று, நேர்ப்பட பேசு போன்ற பாடல் வரிகள் இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இன்றும் பல இளைஞர்கள் தங்களின் வாகனங்களிலும், சமூக வளைத்தல குறிப்புகளிலும் ரவுத்திரம் பழகு, குன்றென நிமிர்ந்து நில் மற்றும் அச்சம் தவிர் போன்ற வரிகளை வைத்துக் கொண்டு உலா வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஓரிரு வார்த்தைகளில் வாழ்க்கைக்கான ஒழுக்க நெறிகளை கற்பித்தவர்கள் நம் தமிழ் புலவர்கள். தமிழ் வளர்ப்போம்...!



