/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அறுவடை சீஸனால் "சாக்குப்பை'களுக்கு கடும் கிராக்கி:கூடுதல் விலைக்கு ஏலம்
/
அறுவடை சீஸனால் "சாக்குப்பை'களுக்கு கடும் கிராக்கி:கூடுதல் விலைக்கு ஏலம்
அறுவடை சீஸனால் "சாக்குப்பை'களுக்கு கடும் கிராக்கி:கூடுதல் விலைக்கு ஏலம்
அறுவடை சீஸனால் "சாக்குப்பை'களுக்கு கடும் கிராக்கி:கூடுதல் விலைக்கு ஏலம்
ADDED : ஜன 05, 2011 01:48 AM
சேலம்: தமிழகத்தில் அறுவடை சீஸன் துவங்கியிருப்பதால், சாக்கு பைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அதனால், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதல் விலைக்கு போட்டிப்போட்டு வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். வடகிழக்கு பருவமழை பரவலாக தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்தது. நீரில் மூழ்கி சேதமானது போக, மீதமுள்ள பயிரை அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஊடு பயிர்களும் அறுவடைக்கு தயாராகி ஓரளவு மகசூல் கிடைத்துள்ளது. அறுவடை தானியங்களை சுத்தம் செய்து பாதுகாப்பாக சேமிக்க, இருப்பு வைக்க மற்றும் வியாபாரத்துக்காக மொத்தமாக எடுத்து செல்ல சாக்குப்பைகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சாக்குப்பைகளுக்கு கடும், 'கிராக்கி' ஏற்பட்டு, விலையும் அதிகரித்துள்ளது. அறுவடை சீஸன் மார்ச் இறுதிவரை நீடிக்கும் என்பதால், விலை மேலும் அதிகரித்து சாக்குப்பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில், 1,445 ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்த பின், காலியாகும் சாக்குப்பைகள் மாதந்தோறும் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும். சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான விலை நிர்ணய கமிட்டி மாதந்தோறும் கூடி சாக்குப்பைக்கான விலையை தீர்மானிக்கும். வெளிச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், டிசம்பர் மாதத்துக்கு 100 கிலோ சர்க்கரை சாக்குப்பை விலை 46 ரூபாய் என்றும், 50 கிலோ அரிசி சாக்குப்பை விலை 10.50 ரூபாயாகவும், 50 கிலோ பருப்பு சாக்குப்பை 8.75 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது. சேலத்தில், டிசம்பர் மாதத்துக்கான சாக்குப்பை ஏலம் நடந்தது. தொடக்க கூட்டுறவு வங்கி, பிரதம கூட்டுறவு பண்டக சாலை, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை சங்கம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் 610 ரேஷன்கடைகளில் இருந்து சாக்குப்பைகள் பொது ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரம் சாக்குப்பைகள் ஏலம் விடப்பட்டன. சேலம் சரக துணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ ஏலத்தை முன்னின்று நடத்தினார். ஏலத்தில் பங்கேற்க வைப்பு தொகை செலுத்திய 34 பேரில், 27 பேர் கலந்து கொண்டனர். சேலம், கரூர், விருதுநகர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டிப்போட்டு சாக்குப்பைகளை ஏலம் எடுத்தனர். அதில், சர்க்கரை சாக்குப்பை ஒன்று நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் அதிகமாக 56 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 10 ஆயிரம் சர்க்கரை சாக்குப்பை ஏலம் போனது. அரிசி சாக்குப்பை நிர்ணயிக்கப்பட்டதை விட 2.90 ரூபாய் அதிகமாக 13.40 ரூபாய்க்கு விலைப்போனது. மொத்தம் 2 லட்சம் அரிசி பைகள் ஏலத்தில் விற்கப்பட்டன. பருப்புப்பை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 6.25 ரூபாய் அதிகமாக 15 ரூபாய்க்கு விலைபோனது. மொத்தம் 25 ஆயிரம் பருப்பு சாக்குப்பைகள் ஏலம் விடப்பட்டன. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: அறுவடை சீஸன் தீவிரமாக நடந்து வருவதால் சாக்குப்பைகளின் தேவை அதிகமாகி விட்டது. அதனால், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேவை அதிகரிப்பால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சணல் விளைச்சல் குறைவால் புதிதாக சாக்குப்பைகளின் வரத்து குறைந்து விட்டது. அதனால், பழைய சாக்குப்பைகளை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது, என்றனர்.

