PUBLISHED ON : டிச 29, 2024

காலம்: செப்டம்பர் 19, 2011 - மாலை 5:30 மணி
களம்: சென்னை - சாலிகிராமம், மஜீத்நகர் வீடு
வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கிறாள் ஒன்றரை வயது குழந்தை கவிதா. அம்மா வசந்தி வீட்டிற்குள் வேலையாக இருக்க, அப்பா கணேஷ் அலுவலகத்தில் இருக்கிறார்.
ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை மகளை வந்து பார்த்துக் கொண்டிருந்த வசந்தி, மூன்றாவது முறையாக வாசலுக்கு வருகையில் குழந்தை கவிதா அங்கில்லை. 'ஆர் 5' விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 1757/2011 எண்ணுடன் முதல் தகவல் அறிக்கை பதிவாகிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆகஸ்ட் 11, 2014ல் மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்படுகிறது.
இடைப்பட்ட ஆண்டுகளில்...
* என் மக இருந்திருந்தான்னா என் பைக் சத்தம் கேட்டதும் இந்நேரம் ஓடி வந்திருப்பா...'
* இந்த பால்புட்டியையும், சங்கையும் பார்க்குறப்போ அவ என் மடியில கிடக்குற மாதிரியே இருக்குது!'
* இந்தா... அவ காணாம போறதுக்கு 17 நாள் முன்னே கிரகப்பிரவேசத்துல எடுத்த போட்டோ; தேவதையாட்டம் இருக்குறால்ல!'
புலம்பித் தவிக்கின்றன பிள்ளையை தொலைத்த தாய்மையும், ஆண்மையும்!
காலம்: ஜனவரி 5, 2024
களம்: 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சைதாப்பேட்டை.
நீதிபதி: 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்ப உதவியுடன் காவல் துறை உருவாக்கி இருக்கும் கவிதாவின் 14 வயது புகைப்படத்துடன் தேடுதல் பணி தொடர அனுமதி வழங்கப்படுகிறது!
இன்று...
'கவிதா பிறந்த நவம்பர் 6, 2009 அன்னைக்கு இருந்த சிலிர்ப்பு, அவ 14 வயசு போட்டோவை பார்த்த அன்னைக்கும் இருந்தது! போட்டோ பார்த்ததுல இருந்து அவளை அப்படியே கட்டிப்பிடிச்சு அழணும் போல இருக்குங்க!' - உருகுகிறார் அப்பா கணேஷ்.
'பெரிய பொண்ணா அவளை போட்டோவுல பார்த்ததுல இருந்து வீட்டுல அவ நடமாடுற மாதிரியே இருக்குது. 'பெரிய மனுஷி ஆகுற வயசாச்சே...'ன்னு நினைக்கிறப்போ தான் உயிர் கருகுது!' - அழ வைக்கிறார் அம்மா வசந்தி.
'அனைத்து வித முயற்சிகளிலும் பலனில்லை' என்று அக்டோபர் 15, 2024ல் காவல் துறை சமர்ப்பித்த அறிக்கையும், 'குழந்தை கவிதாவை கண்டுபிடிக்க முயற்சி செய்த காவல் துறையின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது' என்பதாக நவம்பர் 29, 2024ல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பும் மனதை நொறுக்கிப் போட்டிருக்கும் நிலையில்...
'முதல்வரின் முகவரி'க்கு மே 25ம் தேதி அனுப்பியிருக்கும் மனு மீதான நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் கணேஷ் - வசந்தி தம்பதியினர்.
இறைவா... கவிதாவை வீடு சேர்த்து விடு.