
'எப்படி வாழ்வதென்றே தெரியவில்லை!' - டைரியில் எழுதிவிட்டு கிளம்பினேன்.
'ஒருமுறையாவது தனுஷ்கோடியின் அரிச்சல்முனைக்கு சென்றுவிட வேண்டும்!' எனும் நீண்ட நாள் ஆசையின் பாதி வழியில் இப்போது நான். கண்ணெதிரில்... பனை ஓலை குடிலுடன் ஒரு கடை. கருப்பட்டி சுக்கு காபி, பனங்கிழங்கு பால், கருப்பட்டி உளுந்து பால், பனம்பழ மில்க் ஷேக், பனங்குருத்து மில்க் ஷேக், கருப்பட்டி பானகம் என நீண்ட மெனுவில், 'பனம்பழ மில்க் ஷேக்' தேர்ந்தெடுத்தேன்; காரணம்... தாத்தா சுட்டுத்தந்த பனங்கிழங்கின் வாசம் இன்னும் என் நாசிக்காற்றில் இருக்கிறது!
பனம்பழத்தை நன்கு காய வைத்து சர்க்கரை சேர்த்து மாவாக திரித்து, 100 மி.லி., பாலில் 10 கிராம் அளவில் இந்த மாவையும் சர்க்கரையையும் சேர்த்து ஐஸ்கட்டியோடு மிக்ஸியில் அடித்தால்... பனம்பழ மில்க் ஷேக். ப்ப்ப்பா... பெருஞ்சுவையின் பேரனுபவம்.
'ராமநாதபுரத்தின் சாத்தான்குளம் 'பல்மெட்டோ' கடையில் ருசியான பனம்பழ மில்க் ஷேக் பருகினேன்!' என பதிவிட்டு முகநுால் மேய்கையில்...
'இருந்து என்ன ஆகப்போகிறது; செத்து தொலைக்கலாம். செத்து என்ன ஆகப்போகிறது; இருந்து தொலையலாம்' எனும் கல்யாண்ஜியின் கவிதை கண்ணில்பட்டது. 'வாழ்வதின் மூலமே வாழ கற்றுக்கொள்ள முடியும்' எனும் உண்மை புரிந்தது.
அந்த கவிதையை பகிர்ந்தது நீங்களா?
99629 98607