
திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூரில் தொந்தி தெறிக்க பிரியாணி நிறைத்தாயிற்று. தொப்பை தரை தட்ட பழைய வாணியம்பாடி சாலையில் நடந்து கொண்டிருந்தபோது ஈர்த்தது... முனீர் இனிப்பகம்.
முஸ்லிம் திருமண விருந்துல இறுதியா பரிமாறுற ஆற்காடு நவாப் காலத்து பிர்னி எங்க ஸ்பெஷல். அசைவ உணவு ஜீரணமாக எங்க பிர்னி உதவும் என்றார். இனிப்பக ஊழியர். கொழ கொழ நிலையில் இருந்தது பிர்னி. குட்டி ஸ்பூனால் அள்ளிய மறுகணம், நாவில் ஐஸ் ஒத்தடம் கொடுத்த உணர்வு. ஏலக்காய் கமகமக்க, பாதாம், பிஸ்தா, அத்தி, அக்ரூட், முந்திரிகளின் கலவையால், மழை உறிஞ்சிய வேரானது மனம்!
வேறெதுவும் வேணுமா சார்? - ருசி தந்த கிறக்கத்திற்கு நீர் தெளித்தது பரிமாறியவரின் குரல். ஆமா வேணும்; உங்க புன்னகையின் ரகசியம் என்ன? என்றேன்.
கசப்பான வாழ்க்கையில இனிப்பு சூழ வாழ்ற பாக்கியத்தை அல்லாஹ் கொடுத்திருக்கிறார். நேர்மறையா வாழ்க்கையை அணுகுறேன். இங்கே வர்றவங்களுக்கு என்னால தர முடிஞ்ச பரிசு இது புன்னகை மட்டும்தான் சார்! என்றார். நான் எழும்முன் அன்பாய் அவரது தோள் தட்டிச் சென்றது என்னைக் கடந்த ஓர் உருவம்.
அது நீங்களா?
பதமாய் வெந்த துக்கடா பாசுமதி அரியோடு, சுண்ட காய்ச்சிய பால், பால்கோவா, நெய், பொடியாக்கிய உலர்பழங்கள் சேர்த்து கிளறி குளிரூட்டினால்.. பிர்னி.
94430 41063