
பிப்ரவரி, 2025 - 'ஸ்குவாஷ்' சீனியர் இந்திய தரவரிசையில் 4ம் இடத்தில் பூஜா ஆர்த்தி!
பூஜாவின் அப்பா ரகு, தேசிய அளவில் சாதித்த நீச்சல் வீரர். அம்மா அமுதா 'ட்ரையத்லான்' வீராங்கனை. அண்ணன் கிஷோர் அரவிந்த், தேசிய அளவிலான 'ஸ்குவாஷ்' வீரர். 'நானும் உங்களைப் போல் சாதிக்க வேண்டும்' என்று ஏழு வயதிலேயே ஒரு சிறுமி கேட்பதற்கு இதற்கு மேல் என்ன துாண்டுதல் வேண்டும்!
சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லுாரியில், பி.ஏ., சமூகவியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார் பூஜா.
அன்றும் இன்றும்
2015 - 'ஜூனியர் நேஷனல் ஸ்குவாஷ்' சாம்பியன்
2024 - 'கேலோ இந்தியா ஸ்குவாஷ் - 2023' சாம்பியன்
கண்ணாடி முன் பூஜா நிற்பின்...
'இதோ பாருடி... பரிட்சைக்கு முந்தினநாள் மட்டுமே படிச்சாலும் 70 சதவீத மதிப்பெண் வாங்க முடியுற உன்னால, உனக்கு பிடிச்ச விளையாட்டுல அப்பப்போ தோல்வி கிடைக்குறதுக்கான காரணத்தை உணர்ந்துட்டியா; 'வேகம் இருக்குற அளவுக்கு விளையாட்டுல நிதானம் ரொம்ப முக்கியம்'னு நீ அதிவேகமா உணர்ந்தாகணும்!
'அதேமாதிரி, எதிராளியோட பலவீனத்தை கணிக்கிறதுல இன்னும் கொஞ்சம் நீ மேம்படணும். என்ன பார்க்குறே... புரிஞ்சுதா?'
'கில்லி'யின் கனவு... 'ஒலிம்பிக்' பதக்கம்.