sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

முகவரி

/

முகவரி

முகவரி

முகவரி


PUBLISHED ON : மார் 30, 2025

Google News

PUBLISHED ON : மார் 30, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இவர் இங்கே' என்றுரைக்கும் முகவரி அல்ல இது; 'இவர் இப்படி' என்று சொல்லும் முகவரி! இவ்வாரம்... மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை துறை தலைமை மருத்துவர் கோ.வேல்குமார்.

இந்த பணியால் தங்களின் மனம் நொறுங்கியதுண்டா?

மருத்துவரா நான் தர்ற நம்பிக்கையை விட மருத்துவ அறிவு இல்லாத உறவுகளோட வார்த்தைகளை நம்பி, அதுநாள் வரையிலான என் சிகிச்சைகளை நோயாளி உரசிப் பார்க்குறப்போ ஏதோ ஒண்ணு எனக்குள்ளே நொறுங்கும்!

'நான்' எனும் வார்த்தை இறுதியாய் வருமாறு உங்களை பற்றி ஒரு வாக்கியம்?

'நேர்மையாக வாழ்கிறேன்'னு சொல்ல மட்டுமே விரும்புற பெரும் கூட்டத்துக்கு மத்தியில, நேர்மையா வாழ்ந்து காட்டின மனிதர் என் அப்பா கோபால்; இப்போ, தெய்வமாகி நிற்கிற அவரோட இரண்டாவது மகன் நான்!

தொழில் அனுபவத்தில் சொல்லுங்கள்... மனிதன் மனிதனாக இருக்கிறானா?

'காப்பாத்துறது கஷ்டம்னு அங்கே சொல்லிட்டாங்க'ன்னு கண்ணீர் விட்டு கைபிசைஞ்சு வர்ற குடும்பம், அந்த உயிர் காப்பாற்றப்பட்டதுக்கு அப்புறம் கண்ணீரோட தானே 'நன்றி' சொல்லுது; 100 சதவீதம் மனிதம் இருக்குது!

'என் வெற்றிக்கு நான் மட்டுமே காரணம்' என்பது மமதையா?

'சுவாசிக்கிற காற்று நமக்கு சொந்தமில்லை'ங்கிறப்போ நுரையீரல் சிகிச்சை துறை மருத்துவரான நான், 'என் வெற்றிக்கு நான் மட்டுமே காரணம்'னு சொன்னா, அது மமதை மட்டுமல்ல... அபத்தமும் கூட!

ஏதேனும் ஒரு நோயாளி தானறியாது தங்களுக்கு சிகிச்சை தந்ததுண்டா?

ஒரே மருந்து பல உடல்கள்ல சிறு சிறு வித்தியாசங்கள் காட்டும்; அந்த நேரங்கள்ல தனக்குள்ளே என்ன நிகழுதுன்னு துல்லியமா சொல்ற ஒவ்வொரு நோயாளியுமே என் மருத்துவ அறிவுக்கு சிகிச்சை தர்ற மருத்துவர்தான்!

பணம் இல்லாதவனின் வாழ்க்கை நீங்கள் அறிந்தவரையில்...

அது, மூச்சு முட்டுற கடைசி வினாடியா இருக்கும்; தன் விரல்களைப் பற்றி நிற்குற பிரியமானவரோட கண்களை அந்த ஏழை நோயாளி இமைக்காம பார்த்துட்டே இருப்பார்; அந்த பார்வைகள்ல தெரியும் வாழ்க்கையோட உண்மை!

உங்களின் ஒருநாள் வெறுமையாக இருப்பின் காரணங்கள் என்னவாக இருக்கும்?

'வாழணும்'னு போராடுற பிஞ்சு உயிரை 'இனி காப்பாற்ற முடியாது'ன்னு நான் உணர்ற நொடியும், அதை அந்த பெற்றோர்கிட்டே சொல்ற நிமிஷமும், அதற்குப் பிறகான சம்பவங்களும் ரொம்பவே வெறுமையா உணர வைக்கும்!

யாரைப் பார்க்கும்போது மிகச்சிறியவனாக உணர்கிறீர்கள்?

'எந்த ஒரு சாதனைக்கும் சொந்தக்காரர் அதை நிகழ்த்தியவர் அல்ல; அவரை ஈன்றெடுத்த பெற்றோர்'ங்கிறது உண்மைன்னா, என் அப்பாவோட போட்டோ முன்னாலேயும், என் அம்மா முத்துலட்சுமி முன்னாலேயும் நான் குழந்தைதான்!

உங்களுக்கு என்ன தந்திருக்கிறது இந்த சமூகம்?

மனைவி வாசுகி, மகள் கனிஷ்கா, மகன் கவுசிக், நல்ல உறவுகள், நல்ல நண்பர்கள்... இப்படி, எனக்கு நிறைய வரங்கள். நான் சொன்னதுல உள்ள 'நல்ல'ங்கிற புரிதலுக்கு, இந்த சமூகம் என்னை பட்டை தீட்டினதுதான் காரணம்!

பணியில் நிறைவாக உணரும் நாட்கள் எப்படியானவை?

ஓர் உயிரை காப்பாத்துற கருவியா என்னை பயன்படுத்தினதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வேன்; ரொம்பவே சந்தோஷமா இருப்பேன்; 'தாய்மையின் உணர்வு இதுதானா'ன்னு எனக்குள்ளே அடிக்கடி கேட்டுக்குவேன்!

உங்களை சந்திக்காமல் இருக்க வழக்கமாக வேண்டிய பழக்கம்?

'சிகரெட் பழக்கமில்லை; மூக்குப்பொடி மட்டும்தான்'னு மாற்று வடிவத்துல விஷம் சாப்பிடுற பழக்கங்களை தொலைக்கணும்; படுக்கையில சாய்ஞ்சதும் மனசும் உறங்குற அளவுக்கு உண்மையா இயங்கணும்; அவ்வளவுதான்!

உங்கள் பார்வையில் எதன் தரம் தாழ்ந்து வருகிறது?

'எதிர்ல நிற்கிறவனை உட்கார சொல்லிட்டா, திறமையை பாராட்டிட்டா, நமக்கு தெரிஞ்சதை சொல்லிக் கொடுத்துட்டா... நம்ம தகுதி தாழ்ந்திருமோ'ங்கிற அறிவற்ற அச்சத்தால 'தன்னம்பிக்கை'யோட தரம் தாழ்ந்துட்டு வருது!

'பெருமூச்சு' - அறிவியல் அல்லாத முக்கிய காரணம்?

பொறாமை.






      Dinamalar
      Follow us