
'இவர் இங்கே' என்றுரைக்கும் முகவரி அல்ல இது; 'இவர் இப்படி' என்று சொல்லும் முகவரி! இவ்வாரம்... கைபிசைந்து நிற்கும் துயர தருணங்களில், 82915 82915 அழுத்தினால், விரைந்து வந்து விறுவிறுவென நேர்த்தியாய் காரியம் ஆற்றும் சென்னை, 'ப்ளையிங் ஸ்குவாட்' ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனர் பி.ஆர்.எம்.எம். சாந்தகுமார்.
நீங்கள் சேவை மனிதரா... தொழில் வித்தகரா?
அதிநவீன வசதிகளோட 52 ஆம்புலன்ஸ், 12 அமரர் ஊர்தி, 15 ஆன்மாக்களை பாதுகாக்குற அமரர் குடில்... இதெல்லாம் வைச்சிருக்கிற நான் சேவை மனதுள்ள ஒரு முதலாளி; என் 120 தொழிலாளர்களுக்கு வழிகாட்டுற ஒரு தொழிலாளி!
'அனைவரும் நலமாக இருக்க வேண்டும்' என்று பிரார்த்தனை செய்வதுண்டா?
என் 18 வயசுல ஆம்புலன்ஸ் இயக்க வந்துட்டேன்; இப்போ எனக்கு 63 வயசு; 'என் ஆம்புலன்ஸ்ல பயணிக்கிற எந்த உயிரையும் பறிச்சுடாதே'ங்கிற நியாயமான பிரார்த்தனைக்கு ஒருநாள் கூட நான் விடுப்பு தந்ததில்லை!
துக்க வீட்டில் உணர்ச்சிவசப்பட்டிருக்கும் மனிதனை சுலபமாக ஏமாற்றி விடலாம்தானே?
உயிரற்ற உடலை 'சடலம்'னு சொல்லாம 'ஆன்மா'ன்னு சொல்ற நான், மனசாட்சியோட இதுக்கு பதில் சொன்னா 'ஆமா'ன்னு சொல்வேன்; இது என்னை உரசிப் பார்க்குற கேள்வின்னா, 'நான் அப்படியான மனிதன் இல்லை'ன்னு சொல்வேன்!
'மரணம்' - சாந்தகுமாரின் பார்வையில்?
'ஒரு வாக்கியத்துக்கான முற்றுப்புள்ளி தான் மரணம்'ங்கிறது என் நம்பிக்கை; அந்த வாக்கியத்தை அர்த்தமுள்ளதா மாத்திக்க காலம் தர்ற வாய்ப்புதான் வாழ்க்கை. நம்ம மரணத்துக்கு கவுரவம் தர்றது நாம வாழ்ந்த வாழ்க்கைதான்!
இந்த சமூகத்தின் மீது கோபம் உண்டா?
'எப்போ தொலைச்சோம்... எங்கே தொலைச்சோம்'னு அறியாம இருக்குறதைக் கூட ஏத்துக்கலாம்; ஆனா, 'எதை தொலைச்சோம்'னு உணராம இருக்குற சமூகத்தை என்னன்னு சொல்றது; 'ஒழுக்கம்' தொலைஞ்சு போயிருச்சு!
இப்படியான தொழிலில் தங்களது சந்தோஷத்திற்கு காரணமாகும் தருணங்கள்?
'இறுதிச் சடங்குகளுக்கு பொறுப்பேற்று நடத்துறதால மனசு இறுகிப் போச்சு'ங்கிறது உண்மை; ஆனா, இந்த கல்லை பேரன், பேத்திகளோட அன்பு நதி உருட்டி உருட்டி வழுவழுப்பா பளபளப்பா வைச்சிருக்கிறதும் உண்மை!
உங்களது கண்ணீர் சுரப்பிகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றனவா?
அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் அடையாளமான சாந்தா அம்மா மறுபடியும் பிறந்து வந்தாங்கன்னா ஆனந்த கண்ணீர் வடிப்பேன்; வந்தவங்க மறுபடியும் இறந்துட்டா அன்னைக்கு மாதிரியே தேம்பி அழுவேன்!
தங்களின் வேர், கிளைகள் பற்றி...
'உண்மையா இருக்கணும்ப்பா'ன்னு சொல்லி வளர்த்த அம்மா சரோஜாவும், அப்பா மோகனும் வேர்; மனைவி லலிதா இந்த மரத்துக்கான நிலம்; இரண்டு மகள்களும், மகன்களான இரு மருமகன்களும், பணியாளர்களும் என் கிளைகள்!
மனித உருவில் தாங்கள் சந்தித்த கடவுள்?
டாக்ஸி டிரைவரா இருந்த நான் ஆம்புலன்ஸ் வாங்கி நின்னப்போ, தன் 'ஜெயதேவ் மருத்துவமனை'யோட பெயரை பயன்படுத்திக்க அனுமதிச்ச மருத்துவர் டி. ராமச்சந்திரனுக்கு என் மனசுல கோவில் கட்டி வைச்சிருக்கேன்!
இந்த 45 ஆண்டுகளில் என்னென்ன சம்பாதித்திருக்கிறார் சாந்தகுமார்?
ஆன்மாக்களை சுமக்குற 'ப்ரீஸர்பாக்ஸ்' என் கண்டுபிடிப்பு; அதுக்கு 'காப்புரிமை' வைச்சிருக்கேன். ஐந்து லட்சம் ஆன்மாக்களோட இறுதி காரியத்துக்கு உதவியா இருந்திருக்கேன். அவங்க குடும்ப உறுப்பினர்கள் 'நன்றி' சொல்றப்போ நான் வணங்குற சிவனை உணர்ந்திருக்கேன்!
பார்த்த அனுபவத்தில் சொல்லுங்கள்... சடலத்தை மதிப்பிற்குரியதாக்குவது எது?
எல்லா சடங்குகளும் முடிஞ்சு சாம்பலாகுறதுக்கு ஆன்மா தயாராகுற நேரத்துல, ஏதோ ஒரு ஜீவன் அந்த அசைவற்ற முகத்தை உத்துப் பார்க்கும்; 'நீ முழிச்சிடேன்'ங்கிற கெஞ்சல் அந்த பார்வையில தெரியும். படுத்திருக்கிறது 'மதிப்பிற்குரிய ஆன்மா'ன்னு நினைச்சுக்குவேன்!
இன்றைய உலகில் மனிதர்கள் உலவுகிறார்களா... வாழ்கிறார்களா?
'பிறந்தது உதவுறதுக்குதான்'னு செயல்ல காட்டுற எல்லா மனிதர்களுமே வாழ்றாங்க; 'அம்மா, அப்பா மரணத்துக்கு வரமுடியாத சூழல்'னு காரணங்களை அடுக்குற பிள்ளைகள், வெளிநாட்டுல வாழ்றதா நினைச்சு உலவிட்டு இருக்குறாங்க!
உயிர் காக்கும் ஆக்ஸிஜனுக்கு இணையானது...?
ஆறுதல்.