PUBLISHED ON : ஜூலை 26, 2026

திரை அனுபவத்தில் இது பேரனுபவம்
கடவுளின் நம்பிக்கையை ஆயுதமாக்கி போரில் வெல்லும் மன்னன் ஒடிசஸ், அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாகிறான். இதனால், சொந்த நாடு திரும்ப முடியாமல் பத்து ஆண்டுகள் தவிக்கிறான். மன்னவன் வருகைக்காக மனைவி, மகன் காத்திருக்க, அந்நாட்டை ஆள சில புல்லுருவிகள் துடிக்கின்றனர்; முடிவு என்ன?
'பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்' எனும் விளம்பர வாசகம் போல, 'இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் படங்கள்' என்றாலே அதன் தரம் எளிதில் விளங்கிவிடும். பிரமாண்டம், சவாலான திரைக்கதை ஆக்கம், மதிநுட்பம் என அவரது தனித்துவம் இதிலும் முத்திரை பதித்திருக்கிறது!
மொத்தம் 24 புத்தகங்களாக தொகுக்கப்பட்ட கிரேக்க புராணம் ஒடிசியை, 172 நிமிட காட்சிகளின் தொகுப்பாக வடித்திருக்கிறார் நோலன். கடல், மலை, காடு என விரியும் காட்சிகள் தொழில்நுட்ப உதவி தாண்டி, இதிகாச கதைக்கு இயற்கையாய் உயிரூட்டி இருக்கின்றன!
கடவுளின் சாபம், நர மாமிசம் சாப்பிடும் பூதம், மனிதர்களை விலங்குகளாக மாற்றும் சூனியக்காரி, விநோத தீவு உள்ளிட்ட மாயாஜாலங்கள்; நம்பிக்கை, குற்றவுணர்வு, போர் வெறி, துரோகம், பேராசை உள்ளிட்ட உளவியல் உணர்வுகள்; கடல் பயணம், போர்க்களம் உள்ளடக்கிய பரபரப்பு என, திரிவேணி சங்கமமாய் சிலிர்க்க வைக்கிறது திரைக்கதை!
ஒடிசஸாக மேட் டேமனும், அவரது மனைவியாக ஆனி ஹாத்வேவும் அழுத்தமான நடிப்பை வழங்கி இருக்கின்றனர். போருக்குப் பின் தன் அனுபவங்களை மனைவியிடம் ஒடிசஸ் பகிரும் காட்சி, இப்படைப்பை காவியமாக்கி இருக்கிறது. 'ஐமேக்ஸ்' கேமராக்களில் படமாக்கப்பட்ட காட்சிகள், உணர்வுகளை கடத்தும் மெல்லிசையோடு கல்வெட்டாக மனதில் பதிகின்றன.
'ஒடிசி' புராணம் குறித்து ஓரளவு தெரிந்திருக்க வேண்டும்; சம்பவங்களை கலைத்துப் போட்டு கதை சொல்லும் பாணியை ரசிக்க பொறுமை வேண்டும்; தத்துவ விசாரணைகள் மீது பேரார்வம் வேண்டும்; இந்த திறன்கள் இருப்பின் இப் படைப்பில் பேரனுபவம் நிச்சயம்.
ஆக...
வசூல் கொண்டு அளந்தாலும் வாழ்த்து மழையால் அளந்தாலும் பிரமிக்க வைக்கும் அற்புதமான படைப்பு
