
பசை செய்யும் மாயம்!
பள்ளிப் பேருந்து கிளம்புவதைப் பார்த்ததும், தான் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்கதவை பலம் கொண்ட மட்டும் தட்டி வீறிட்டு அழும் சுட்டிப் பையன் ஜெப்புவுக்கு, மனரீதியாக ஒரு குறைபாடு; மருத்துவ கடலின் அதீத ஆழம் புகாமல் புரிந்து கொள்ள வேண்டு மெனில், அவனது பிடிவாதம், அதீத சுட்டித்தனம் இரண்டும் அவனைச் சுற்றி இருப்போருக்கு பெரும் பிரச்னைகள்!
வளைகுடா வாழ்விடத்தில் அவனை கட்டுப்படுத்த இயலாத சூழலில் அவனது தாய், தந்தை படும் அவஸ்தைகளே கதை; இவன் வாழ்வில் அமீர் வருவது திரைக்கதை. பணி ஏதும் இல்லா சூழ லில் தன் பசி விரட்ட பணம் திருடச் செல்லும் அமீரின் கரத்தோடு ஜெப்புவின் கரம் பசையால் ஒட்டிக் கொள்ள, அதன்பின் வரிசையா ய்... பாசம் சொல்லும் காட்சிகள்!
'காவல் துறையினர் கண்ணில் சிக்கிவிடக் கூடாது' எனும் சவாலோடு, ஒட்டிய கரங்களுடன் பொடியனை அணைத்தபடி இரவு சாலைகளில் ஆசிப் அலி பயணிக்கும் காட்சிகள் அத்தனையும் நம் மனதோடு பச்சக்கென்று ஒட்டிக் கொள்கின்றன. குறிப்பாக, மண் குவித்து அதில் செல்போனின் அடி பொதித்து, அதன் ' டார் ச்' வெளிச்சத்தில் சிறுவனுக்கு ஆசிப் அலி படம் காண்பிக்கும் காட்சி... குழந்தைகளின் உலகத்தில் நாம் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை அழகின் நிழலாய் சொல்லித் தருகிறது!
ஒருபக்கம் தந்தை சிறுவனைத் தேட, மகன் தொலைந்தது அறியாமல் தாய் இருக்க, எந்தவொரு பய உணர்வும் இல்லாது அந்நியனோடு சிறுவன் அலைய, அந்நியனான ஆசிப் அலி தனக்குள் இருக்கும் இறைத் தன்மையை சிறுவன் ஜெப்புவின் மூலம் உணர்ந்து கொள்ள... பெருக்கி நீர் தெளித்த முற்றமாய் மாறியிருக்கும் நம் மனதில் வண்ண கோலமிடுகிறது க்ளைமாக்ஸ்.
ஆக...
இளையராஜாவின் இசையில் உருகிக் கொண்டிருக்கையில், இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது போல் நிறைகிறது படம்!

