PUBLISHED ON : ஜூன் 15, 2025

செய்தி: வறுமையில் வாடும் சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பம்!
அநீதி: 'தியாகியின் வாரிசு ஓய்வூதியம்' கேட்டு 15 ஆண்டுகளாகப் போராடும் மாற்றுத்திறனாளி பேரன்!
அரசே... என் தாத்தா பி.எம்.ராமு, நேதாஜியின் ஐ.என்.ஏ.,வில் இணைந்து போராடியவர். 57 வயது ஜெகதீசன் எனும் நான் அவருடைய மகள்வழிப் பேரன்; இடுப்புக்கு கீழ் செயல்பாடிழந்த 80 சதவீத மாற்றுத்திறனாளி!
மாற்றுத்திறனாளி உதவித்தொகை மூலம் பரமக்குடி வெங்கிட்டங்குறிச்சி கிராமத்தில் ரூ.2,000 வாடகை வீட்டில் மனைவி, மகளோடு குடியிருக்கிறேன்; ரேஷன் அரிசியில் பசியாறுகிறேன். மத்திய மாநில அரசுகளின் பல விருதுகளாலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியாலும் கவுரவிக்கப்பட்டவர் என் தாத்தா. அவரது மாநில ஓய்வூதிய எண் - 4052/69, மத்திய ஓய்வூதிய எண் - 8831/3.
'தியாகிக்கு ஆண் வாரிசு கிடையாது; மகள் வழிப் பேரனான இவரது உடல் ஊனம் கருதி விடுதலைப் போராட்ட வீரரது வாரிசு ஓய்வூதியம் வழங்கலாம்' என 2011ல் பரமக்குடி வட்டாட்சியர் ஆட்சியருக்கு அறிக்கை தந்தும், 2015ல், 'சிறப்பினமாக கருதி ஓய்வூதியம் வழங்கலாம்' என்று தலைமை செயலக அதிகாரிக்கு ஆட்சியர் பரிந்துரைத்தும் பலன் இல்லை!
சுதந்திரதின விழாவிற்கு அழைத்து பொன்னாடை போர்த்துவது மட்டும்தான் தியாகி குடும்பத்தார் மீது காட்டும் அக்கறையா அரசே?