PUBLISHED ON : ஜூலை 20, 2025

ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழ்கின்ற மனிதர்.... நடிகர் குமரவேல். இவருக்கு ஞாபகங்கள் என்பவை நினைவுச் சின்னங்கள் அல்ல; வாழ்வின் படிக்கட்டுகள். வாழ்வில் ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு தன்னை உயர்த்திய ஞாபக படிக்கட்டுகள் பற்றி இங்கே பகிர்கிறார்!
குட்டு வைத்த ஆசான்
அது 1990; அப்போ நான் புதுச்சேரி பல்கலைக்கழகத்துல, 'பெர்பாமன்ஸ் ஆர்ட்'ங்கிற நிகழ்த்துக்கலை மாணவன். அவுரங்கசீப் பாத்திரத்துல கட்டபொம்மன் மாதிரி விறைப்பா நான் நடிச்சு காமிச்சப்போ, 'ராஜா பாத்திரம்னா நரம்பு புடைக்க கத்தணும்னு இல்லை; முதல்ல, அவுரங்கசீப்பை உள்வாங்கி உன் பாணியில வசனங்களை பேசு'ன்னு என் பேராசிரியர் ராமானுஜம் சொன்னார்.
'நடிப்பு'ன்னா என்னன்னும், 'சுய அடையாளம்'னா என்னன்னும் அன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன்! அதுக்கப்புறம் ஒரு கிராமத்து மேடையில துரியோதனன் வேஷம். திரவுபதியை வழிபடுற அந்த கிராம மக்கள் துரியோதனனா மாறி நின்ன என்னை அடிக்கப் பாய்ஞ்சிட்டாங்க. அதை என் நடிப்புக்கு கிடைச்ச கவுரவமா நினைச்சு ராமானுஜம் சாருக்கு மானசீகமா நன்றி சொன்னேன்!
இலக்கு அல்ல... பயணமே முக்கியம்
அபியும் நானும் படத்தோட ஒரு காட்சியில, உணவகத்துல வைச்சு 'எங்க அம்மா சார்...'ன்னு அபியை காமிச்சு சொல்லுவேன். கண்ணீரோட அந்த வசனத்தை பேசினா காட்சிக்குரிய கனம் வந்திரும்; இதுதான் அந்த காட்சிக்கான இலக்கு!
நான் இலக்கை பற்றி யோசிக்கலை; எனக்குள்ளே இருந்து எது உண்மையா பொங்குச்சோ அதை அப்படியே வெளிப்படுத்தினேன். 'எங்க அம்மா சார்...'னு சொன்னதும் லேசா மூக்கை உறிஞ்சிட்டு அமைதியாயிட்டேன். என்னோட அந்த அமைதி, காட்சிக்கான கனத்தை புதிய பரிமாணத்துல தந்திருச்சு.
நாடகமும், திரைத்துறையும் கொடுத்த ஞாபகங்கள்ல இருந்து நான் புரிஞ்சுக்கிட்டது இதைத்தான்...
'இலக்கு அல்ல... பயணமே முக்கியம்!'
தொலைபேசியில் ஒரு உரையாடல்...
அவன்: ஹலோ... நீ எப்போ வருவே?
அவள்: என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க; நான் வர கொஞ்சம் 'லேட்' ஆகும்!
தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதும் உலை கொதிக்கும் சட்டி மீது கவிழ்ந்திருக்கும் தட்டாக மாறுகிறது அவன் மனம். அவள் நேரில் வந்ததும்...
அவன்: என்கிட்டே இதைப்பற்றி நீ சொல்லவே இல்லையே...
அவள்: திடீர் ஏற்பாடு... அதுவுமில்லாம என்னால அந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும். எல்லா விஷயத்துலேயும் நீ என்னை தாங்கிப் பிடிக்கணும்னு இல்லை; தேவைப்பட்டா சொல்லுவேன்! இது... திருமணத்துக்கு முன்னாடி
எனக்கும் என் மனைவிக்குமான உரையாடல்; 'ஆண்மகனா இருக்குறதால 24 மணி நேரமும் பெண்ணுக்கு ஆபத்பாந்தவனா இருக்கணும்னு அவசியமில்லை'ன்னு எனக்கு உணர்த்தின உரையாடல்.